பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214 மாணிக்கவாசகர்


 வணங்கி நின்று, “அரும்பெரும் அடிகளே, சைவ சமயத்தை நிலை நிறுத்துவது தங்கள் கடமை. தோல்வியுறும் புத்தர்களைப் போக்குவது என் கடமை’ என்று மொழிகின்றான். மணிவாசகப் பெருமான் புத்த குருவை நோக்கி 'நீர் இங்கு வந்த காரணம் என்ன?’ என வினவ, புத்தகுரு, 'அடிகளே, எங்கள் தெய்வத்தையன்றி வேறு தெய்வம் இல்லை என்று யாவரும் காண உறுதிப்படுத்துவதற்கும், இம்பொன்னம்பலத்தே எங்கள் புத்ததேவரை அமர்த்துவதற்காகவும் நேற்றே இங்கு வந்து காத்திருக்கின்றேன்” என்கின்றான். மணிவாசகப் பெருமான் புன்முறுவல் செய்து 'உமது கடவுள் இலக்கணமும் முத்தி நிலையும் இன்னவெனக் கூறுவீராக’ என்கின்றார். புத்தகுரு திரிபிடகத்தில் சொல்லிய வண்ணமே தன் சமயக் கொள்கைகளை எடுத்து விளக்குகின்றான். திருவாதவூரடிகள் அவன் சொல்லியவற்றையெல்லாம் அளவை நூல் வரம்பு தவறாது மறுத்துரைக்கின்றார். தன் சமயக் கொள்கை மறுக்கப்பெற்றமையால் ஒளி மழுங்கிய புத்தகுரு மணிவாசகரை நோக்கி 'நும் கடவுள் யாது? நுமது முத்தி எது?’ என வினவுகின்றான். அடிகளும் அரனது பெருமையினை விரித்துரைக்கின்றார். அவ்வளவில் புத்த குரு இடைமறித்து அடிகள் கூறியவற்றை இகழ்ந்துரைக்கின்றான்.

புத்தகுரு கூறிய இகழ்ச்சியுரைகட்கெல்லாம் நெறியும் பண்பும் தவறாது மறுமொழி கூறிய அடிகள், கலைமகளை நோக்கி 'அம்மையே, நான் மறைகளை நவிலும் நாமகளாகிய நீ முன்னர்த் தக்கன் வேள்வியில் பட்ட துன்பத்தை மறந்து சிவநிந்தை செய்யும் இப்புத்தர்களது நாவிலிருப்பது தகுதியோ? இவர்களது நாவினை விட்டு விரைவில் அகல்வாயாக’ எனச் சினந்து உரைக்கின்றார். நிறைமொழி மாந்தராகிய அடிகளின் சினங்கண்டு அஞ்சிய நாவின் கிழத்தி புத்தர்களுடைய நாவினைவிட்டு நீங்குகின்றாள். அதனால்