உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருத்தில்லை நிகழ்ச்சிகள் 215



அவர்களனைவரும் பேச்சிழந்து ஊமைகளாகின்றனர். இத் துன்பநிலையைக் கண்ட ஈழவேந்தன், வாதவூரடிகளை வணங்கி நின்று, 'அடிகள் பெருமானே, நும் முன்னிலையில் பேச வல்ல புத்தர்கள் ஊமைகளாயினர். பிறவி ஊமையாகிய என் மகளைப் பேசும்படி செய்தருள்வீராயின் யான் நுமக்கு அடியனாவேன்” என்கின்றான். அடிகள் அம்மன்னன் மகளை அழைத்து வரச்செய்து அவளை நோக்கி முன்பு தன்பால் புத்தகுரு விடுத்த வினாக்களுக்கெல்லாம் விடை கூறும்படிப் பணித்தருள்கின்றார். அவளும் அவ் வினாக்களுக் கெல்லாம் தக்கவாறு விடை பகர்ந்து அனைவரையும் வியப்புக் கடலில் ஆழ்த்துகின்றாள். வாதவூரடிகள் அவ்வினா விடைகளைத் தொகுத்து மங்கையர் விளையாட்டில் பாடிப் பயிலும் முறையில் திருச்சாழல் பாடல்களாகப் பாடியருள் கின்றார்.

புத்தர்கள் சைவர்களாதல் : ஊமை மகள் பேசிய அற்புத நிகழ்ச்சியைக் கண்டு வியந்த ஈழமன்னன் மணிவாசகர் திருவடிகளில் வீழ்ந்திறைஞ்சி அவருக்குத் தொண்டனாகின்றான். அடிகள் பெருமானே, இப்புத்தர்களுக்கு ஊமை நீங்க அருள்புரிய வேண்டும் என இரந்து நிற்கின்றான். அடிகளது அருள் நோக்கினால் அங்கிருந்த புத்தர்கள் அனைவரும் ஊமை நீங்கப் பெறுகின்றனர். அவர்கள் அனைவரும் அடிகளின் திருவடியில் வீழ்ந்து வணங்கி "பெரியீர், அடியேங்களுக்கு தெய்வத்த்திருநீறும் அக்கமாலை யும் கல்லாடையும் அளித்தருளல் வேண்டும்' என வேண்டு கின்றனர். மணிவாசகரும் அவர்கள் விரும்பிய வண்ணம் இம் மூன்றையும் அளித்து அவர்களது துவராடையைச் சுட்டெரிக் கின்றார். பிறகு அனைவரும் குழுவாகத் தில்லைச் சிற்றம்பலவனை வணங்கிப் போற்றுகின்றனர்; அடிகள்பால் விடைபெற்றுத் தத்தம் இருப்பிடங்களை அடைகின்றனர். மணிவாசகர் வில்வ வனத்திலுள்ள இலைக்குடிலில் தங்கி