பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருத்தில்லை நிகழ்ச்சிகள் 217



பாடுகின்றார். வேதியராக வந்த அம்பலவாணர் அதையும் ஒரு பாடலும் விடாமல் எழுதிக் முடிக்கின்றார். பின்னர் புத்தகத்தைக் கட்டிக் கொண்டு விரைவில் மறைகின்றார். மணிவாசகப் பெருமான் தமக்கு முன் இருந்த அந்தணரைக் காணாமல் மனம் வருந்துகின்றார்; புறத்தே சென்று தேடு கின்றார். பின்னர் வேதியராய் வந்தவர் எல்லாம் வல்ல இறைவனே எனத் தெளிந்து திருவருளின்பத்தில் தோய்ந்து இருக்கின்றார்.

இங்ஙனம் எழுதிச் சென்ற சிவபெருமான் அதன் முடிவில் ‘அழகிய சிற்றம்பலமுடையார் எழுதியது' எனத் தமது கையொப்பமும் இட்டு அத்திருமுறை ஏட்டினை தில்லைச் சிற்றம்பலத்தின் திருவாயிற்படியில் வைத்தருள்கின்றார். மறுநாள் பூசனை புரிவதற்கு வந்த அந்தணர் என்று மில்லதோர் புத்தகம் அங்கிருத்தலைக் கண்டு அதிசயித்துத் தில்லை நகரத்தாருக்குத் தெரிவிக்கின்றார். அதனைக் கண்ட நகர மாந்தர் “இஃது இறைவன் அருளிய ஆகமமோ தமிழ் நூலோ என அறிதல் வேண்டும்' என்கின்றனர். அப்பொழுது தில்லை வாழ் அந்தணர் ஒருவர் அந்தத் தெய்வ ஏட்டினை நறுமலர் கொண்டு அருச்சித்து வணங்குகின்றார். பின்னர் அந்த ஏட்டினை அவிழ்த்துப் பார்த்தபொழுது அதன்கண் திருவாசகமும் திருச்சிற்றம்பலக் கோவையும் எழுதப் பெற்று முடிவில் 'திருவாதவூரன் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையான் எழுதியது” என்று கைச்சாத்திட்டிருத்தலைக் காண்கின்றார். பின்னர் அனைவரும் இறைவன் திருவருளை வியந்து போற்றுகின்றனர்.

இத்தெய்வத் திருமுறையின் பொருளைக் கேட்டுணர வேண்டும் என்ற பெருவிருப்பம் அனைவருள்ளத்திலும் தோன்றுகின்றது. எல்லோரும் மணிவாசகப் பெருமான் இருந்த இலைக்குடிலை அடைந்து அடிகளை இறைஞ்சி நின்று திருவாசகத் திருமுறை தமக்குக் கிடைத்த அற்புத நிகழ்ச்சியை எடுத்துரைத்து அத்திருமுறைக்குப் பொருள்