பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218 மாணிக்கவாசகர்


விரித்தருளும்படி வேண்டுகின்றனர். இறைவனின் திருவருமட் பெருமையை நினைந்து நெக்குருகுகின்றார் வாதவூரடிகள். எல்லோரையும் அழைத்துக்கொண்டு கூத்தப் பெருமான் சந்நிதிக்கு வருகின்றார். "திருவாசகத்திற்குப் பொருளாவார் பொன்னம்பலவராகிய இவரே" என் அனைவருக்கும் சுட்டிக் காட்டி அவர்கள் யாவரும் காண தில்லையம்பலத்தில் புக்கு மறைகின்றார். கூத்தப் பெருமானாகிய இறைவன் மணிவாசகப் பெருமானைப் பாலுடன் கலந்த நீர்போல் பிரிவறக் கலந்து ஒன்றாம் வண்ணம் தன் திருவடிகளில் சேர்த்துக் கொள்ளுகின்றான். அடிகளது திருமேனி சிவசொரூபமாகிய இந்த அற்புத நிகழ்ச்சியைக் கண்டவர்கள் கூத்தப் பெருமானது திருவருளை வியந்து திருவாசகத் தேனை நுகர்ந்து மகிழ்கின்றனர். இந்த வரலாறு திருவாதவூரர் புராணத்தில் கண்டது.

இந்த வரலாற்றை அறியும் நமக்குத் திருப்பாணாழ்வாரின் வரலாறு நினைவிற்கு வருகின்றது. உலோக சாரங்க முனிவரின் திருத்தோளில் இருந்த வண்ணம் அரங்க நகர் அப்பனின் திவ்விய மங்கல் விக்கிரகத்தை (திருமேனியை) அடிமுதல் முடிவரைக் கண் குளிரச் சேவித்து அதில் ஆழ்ந்து அதன் அழகை அநுபவித்து அந்த அநுபவ அதிசயத்தைப் பின்புள்ளாருக்கும் விளங்கும் பொருட்டு அமலனாதிபிரான் என்ற திவ்வியப் பிரபந்தத்தை அருளிச் செய்து அதன் இறுதியில்,

  என் அமுதினைக்
     கண்ட கண்கள்
  மற்றொன்றினைக் காணாவே

என்றதமது துணியபினை வெளியிட்டு உகப்போடு நிற்கையில் பெரிய பெருமாள் அவரை அங்கீகரித்தருளத் திருப்பாணாழ்வார்-பாண் பெருமாள்-அனைவரும் காண அப்பிரானது திருவடிகளில் மறைந்து காய்ந்த இரும்புண்ட நீராகின்றார். இருபெரு அடியார்களும் இப்பூத உடலோடு இறைவன் திருவடிகளில் கலந்த நிகழ்ச்சி நம்மை மகிழ்விக் கின்றது; நாமும் நம்மை மறந்த நிலையை அடைகின்றோம்.