பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருத்தில்லை அருளிச்செயல்கள் 221



கோசமங்கைப் புராணம், திருப்பெருந்துறைப் புராணம் முதலிய நூல்கலைக் கொண்டு ஒருவாறு உணர்ந்து தெளியலாம்.

திருப்பெருந்துறையில் அருட்குருவாகப் போந்து மெய்ப் பொருளை உபதேசித்தருளிய சிவபெருமான் அடிகளை நோக்கி நலமலி தில்லையுட் கோலமார்தரு பொதுவினில் வருக! (127-28) எனப் பணித்தருளி மறைந்தமையும், அந் நிலையில் உடனிருந்த அடியார்கள் இறைவனது பிரி வாற்றாது தம் உடம்பினைத் துறந்து இறைவனுடன் இரண்டறக் கலந்தமையும், அங்ஙனம் இறைவனை அடையப் பெறாது எஞ்சி நின்ற அடியார்கள் எரியில் பாய்ந்து தம் உடம்பினை விடுத்து இறைவனை அடைந்தமையும் (130-132) கயிலைப் பெருமானாகிய கடவுள் அன்பர்களுக்கு நேர்நின்று அருள் செய்தற் பொருட்டுப் புலியூர்ப் பொதுவாகிய பொன்னம்பலத்திலே புகுந்தருளினமையும் ஆகிய செய்திகள் இப்பனுவலின் இறுதிப் பகுதியில் குறிப்பிடப்பெற்றுள்ளன. இக்குறிப்பினைக் கூர்ந்து நோக்கினால் திருப்பெருந்துறையில் குரவனாக எழுந்தருளிய இறைவன் பணித்திவண்ணம் அடிகள் தில்லைக்கு வந்தபொழுது இப்பனுவலை அருளிச் செய்தார் என்பது தெளிவாகும்.

திருக்குறளில் கடவுள் வாழ்த்தினை அடுத்து வான் சிறப்பு என்ற அதிகாரம் வைக்கப் பெற்றிருப்பதுபோல், திருவாசகத்தில் கடவுள் இலக்கணம் உணர்த்தும் சிவ புராணத்தை அடுத்து இறைவனது இனிய திருவருளாகிய மழையின் சிறப்புணர்த்தும் கீர்த்தித் திருவகவல் என்னும் இப்பனுவல் அமைந்திருத்தல் அறிந்து மகிழத் தக்கது.

40. திருவண்டப் பகுதி (3)

உருண்டு திரண்டு நெருப்புக் காற்றாக இருப்பது கதிரவன். அதனிடத்திருந்து சிதறி வந்து குளிர்ந்து இறுகியிருப்பது இந்த நிலவுலகம்: