பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருத்தில்லை அருளிச் செயல்கள் 227



பனுவலாக முறைப்படுத்தப் பெற்றது இந்த அகவல் ஆகும். முற்றத்துறந்த முனிவர்களால் உணர்த்தப்படும் உறுதிப் பொருள்களுள் இம்மை மறுமை வீடு என்னும் மும்மை நலன்களையும் ஒருங்கே தருவது அறம். எனவே முதற் பொருளாகிய இந்த அறத்தின் பெருமையினை வலியுறுத்தும் நோக்கத்துடன் நீத்தார் பெருமை’ என்ற அதிகாரத்தை அடுத்து 'அறன் வலியுறுத்தல்' என்ற அதிகாரம் வைக்கப் பெற்றுள்ளது. திருக்குறளில் அமைந்த இம்முறையினை யொட்டியே திருவாசகத்திலும் நீத்தாராகிய திருத்தொண்டர்களின் பெருமையினை விளக்கும் "திருவண்டப் பகுதி’யின் பின் என்றும் மாறாத நல்லறத்தின் சிறப்பினை வற்புறுத்தும் இப்பனுவல் வைக்கப்பெற்றுள்ளமை காணலாம்.

42. திருச்சாழல் (12)

சாழல் என்பது மகளிர் விளையாடல்களுள் ஒன்று. ஒருத்தி ஒரு கதையின் செயலைப் பற்றி வினா நிகழ்த்த மற்றொருத்தி கதையின் இடமாகத் தோன்றிய முரண்பாட்டினை நீக்கி அதன் உட்பொருளை விளக்கி விடை கூற, இவ்வாறு மகளிர் இருவர் ஒரு கதை பற்றி வினாவும் விடையும் நிகழ்த்தி உரையாடி விளையாடும் முறையில் அமைந்தது சாழல் என்னும் இவ்விளையாட்டு. சிலப்பதிகார உரையில் பல்வரிக் கூத்துள் ஒன்றாகக் குறிக்கப்பெறும் நற்சாழல்’ இதுவேயாகும்.

திருவாதவூரடிகள் தில்லையில் புத்தரொடு நிகழ்த்திய வாதப் போரில் ஈழ நாட்டு மன்னன் வேண்டுகோட்கிரங்கி அவன் மகளாகிய ஊமைப் பெண்ணைப் பேசவைக்கத் திருவுளங் கொள்ளுகின்றார். அடிகள் ஊமைப் பெண்ணை நோக்கிச் சிவபெருமானுடைய திருவருட்செயல்களின் உட்கருத்து பற்றி வினவுகின்றார்; ஊமைப் பெண்