பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருத்தில்லை அருளிச் செயல்கள் 235



முறையே அவ்வங்கங்கள் இவை இவை என விடைகூறும் முறையில் வினாவும் விடையுமாக அமைந்த நேரிசை வெண்பாக்களையுடையது இத்திருப்பதிகமாகும். கிளி கூறும் முறையில் அமைந்திருத்தலால் இதனைக் 'கிள்ளைப் பத்து’ என வழங்குதலும் பொருந்தும். இத்திருப்பதிகத்தில் சிவபெருமானுக்குரிய பேர், நாடு, ஊர் முதலிய பத்து அங்கங்களைப் பற்றிய புகழ்ச்சியே பொருளாக அமைந் திருத்தலால் இது "திருத்தசாங்கம்" என்று பெயர்பெறுகின்றது.


இப்பதிகத்தில் சிவபெருமானுக்குரியனவாகக் கூறப் பெறும் பத்து அங்கங்கள் :

  பேர்    : ஆரூரன், எம்பெருமான், தேவர் பிரான் 
  நாடு   : தென்பாண்டி நாடு 
  ஊர்    : உத்தரகோசமங்கை
  ஆறு  :  ஆனந்தமாகிய ஆறு 
  மலை  : இன்பமரும் முத்தியருளும் அருளாகிய மலை 
  ஊர்தி  : வான்புரவி
  படை  : கழுக்கடை (சூலம்) 
  முரசு  : நாதப்பறை 
  தார்   : தாளி அறுகு
  கொடி : ஏறு (காளை)

பாடலுக்கு ஒன்றாக இவை குறிக்கப்பெறுகின்றன. இவ்வாறு தசாங்கம் கூறுதல் பாடாண்திணையில் உலக வழக்கொடு பொருந்தியது; இத்திருத்தசாங்கம் பாடாண்திணையில் * கடவுள் வாழ்த்தின் பாற்படும்.


45. கோயில் மூத்த திருப்பதிகம் (21)

'கோயில்’ என்பது திருத்தில்லை மாநகரைக் குறிக்கும். மூத்த திருப்பதிகம் என்பது சிறந்த திருப்பதிகம் என்பதாகும். சிறப்பு என்பது பொருள் உண்மை என்றாகும். பொருள் என்பது முப்பொருள்.