பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருத்தில்லை அருளிச் செயல்கள்-245



‘அடியேனுக்கு உண்டாகிய மகிழ்ச்சியெல்லாம் தில்லைச் சிற்றம்பலத்துள் ஆடல் புரிந்தருளும் ஆண்டவனைச் சார்ந்ததனால் ஆகியது எனத் தமது மகிழ்ச்சியை எடுத்துரைத்து அம்பலவாணனைப் போற்றும் முறையில் அருளிய திருப் பதிகம் இது. குலாவுதல் - மகிழ்தல்: அஃது உலா என்பது போன்று குலா என முதல் நிலை அளவாய் ஈண்டுப் பெயராய் நின்றது.

                                  உள்ளம்
  விரும்பு சிவானந்த வெள்ளம்விழைந்த
     தில்லைநாயகன் மிகக்கொண் டாடி
  நிரம்புமனக் களிமிகுந்த இறுமாப்பே 
     குலாப்பத்தாய் நிகழ்த்த லாமே.

என்று திருப்பெருந்துறைப் புராண ஆசிரியர் இப்பதிகக் கருத்தினை விளக்குவர். அஃதாவது, என்றும் ஒருபடித்தான இன்பவெள்ளத்துத் திளைப்பதால் மனத்தில் களிப்பு மிகுந்து இன்பத்திலிருத்திய இறைவனை வாயார வாழ்த்தி உரைப்பது குலாப்பத்து என்பது இதன் கருத்தாதல் தெளியப்படும். இப்பதிகத்திற்கு 'அநுபவம் இடையீடு படாமை’ என முன்னோர் கருத்துரை வரைத்தனர். அதாவது விட்டுவிட்டுப் பற்றாமல் ஒரு தன்மையாயிருப்பது இதன் பொருளாகும். இப்பதிகத்தில் உள்ள திருப் பாடல்கள் யாவும் அடிகள்பால் சிவாதுபவம் இடையீடின்றி நிகழுந் திறத்தினை இனிது விளக்கி நிற்றலைக் கண்டு மகிழலாம். ஒவ்வொரு திருப்பாடலும் 'குலாத்தில்லை யாண்டானைக் கொண்டன்றே. என்ற தொடரால் இறுகின்றது. என்பால் உளதாகிய இம்மகிழ்ச்சிப் பெருக்கு தில்லையம்பலவாணனாகிய ஆண்டவனால் விளைந்ததாகும் எனப் பொருள் தருவதாகும் இது. குலா, எழுவாய். கொண்டன்று, பயனிலை, கொண்டன்று-கொண்டது. இப் பதிகத்தில் பத்துத் திருப்பாடல்கள் உள்ளன.