பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252 மாணிக்கவாசகர்



(தூசிப் படை, முன்னணிப் படை); பக்தர்காள், நீங்கள் இரு பக்கங்களிலும் புடை சூழ்ந்து செல்லுங்கள் (கைகோட் படை, வளைக்கும் படை): யோகியர்களே நீங்கள் பேரணிப் பகுதியினைச் செலுத்துங்கள்; (நடுவே சென்று எதிர்க்கும் பெரும் படை); சித்தர்களே, பின்னணிப் படையில் செல்லுங்கள் (கடைக் கூழைப் படை). துன்பத்திற்கு இடங்கொடாத வீடு பேறே நம் நாடு. அதை நாம் சென்றடைவோம்" என்கின்றார்.

பரம்பொருளை நாடுபவர்களுள் பெரு நெறி பிடிப்பவர் எவர் என்னும் பாகுபாடு பொருந்தாது. ஞானிகள், தொண்டர்கள், பக்தர்கள், யோகிகள், சித்தர்கள் ஆகிய யாவரும் ஒரே குறிக்கோளை நாடிச் செல்பவர்களாதலால், அவர்கட்கிடையே உயர்வு தாழ்வு காண்பது அஞ்ஞானத்தின் விளைவு ஆகும்.

போர்இயலில் வியூகம் அல்லது படைவகுத்தல் ஒரு தனிப்பட்ட கலை ஞானம் படையின் பெருக்கத்தால் மட்டிலும் வெற்றி வாய்த்து விடாது. சூழ்நிலைக்கு ஏற்ற வாறு அணிவகுத்தல் படைத்தலைவனின் போர்த் திறனின் விளைவு ஆகும்; நால்வகைப் படைகளைச் (தேர், யானை, குதிரை, காலாள்) சரியாகப் பயன்படுத்தினால் வெற்றி உறுதி, வாழ்க்கை என்னும் போராட்டத்திற்கு இஃது இன்றியமையாத கோட்பாடு ஆகும்.

உலக வாழ்க்கை வேறு, ஞான வாழ்க்கை வேறு எனப் பொருள் படுத்தலாகாது என்பது கீதையின் கோட்பாடு. யோகேசுவரனாகிய பரந்தாமன் கர்மயோகம்,இராஜயோகம் பக்தி யோகம், ஞான யோகம் ஆகிய நான்கின் பலத்தை (நான்கு கூறுகளையுடைய அருள் படையை) அருச்சுனனுக்கு வழங்குகின்றான். இந்த நான்கு படைகளையும் முறையாகப் பயன்படுத்தும் சீவான்மா அஞ்ஞானப் பகையை வென்று பரமனுக்கு உரிய அடியவனாகின்றான்.