பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

266 மாணிக்கவாசகர்



விளக்கம் : எது அகண்டமோ அஃது ஒருபொழுதும் துண்டிக்கப்படுவதன்று என்பது கோட்பாடு. அகண்டமாயுள்ள ஆகாசம் இதற்கு நல்லதொரு சான்று. ஒரு பாண்டத்திற்கு உள்ளிருக்கும் ஆகாசம் புறத்திலுள்ள ஆகாசத்தினின்றும் பிரிக்கப்பட்டது போன்று தென்படுகின்றது. உண்மையில் ஆகாசம் புறத்திலும், உள்ளும், பாண்டத்தினூடும் பிளவுபடாது வியாபகமாயிருக்கின்றது. சட ஆகாசத்தைப் பற்றிய இக்கோட்பாட்டை முதலில் அறிந்து கொள்வது அவசியமாகின்றது.

சடஆகாசம் போன்று சித் ஆகாசம் அகண்டமானது. அங்கு இங்கு எனாதபடி அஃது எங்கும் பிரகாசமாயுள்ளது. அதற்குப் போக்கும்வரவும் புணர்வும் இல்லை. அகண்டமாயுள்ள ஒரே சடஆகாசத்தில் எண்ணிறந்த கோளங்கள் மிதந்து கொண்டிருக்கின்றன. எண்ணிறந்த சூரிய மண்டலங்கள் அதில் தோன்றவும் ஒடுங்கவும் செய்கின்றன. அந்த நிகழ்ச்சிகளுக்கிடையில் ஆகாசம் பிளவுபடாமலும் மாறு படாமலும் யாண்டும் இருந்தபடியே உள்ளது. சித் ஆகாசம் அல்லது சிதம்பரத்தைப்பற்றிய உண்மையும் இதுவே. எண்ணிறந்த சீவான்மாக்கள் இதில் தோன்றி, இருந்து, ஒடுங்குகின்றன. சட ஆகாசம் எங்ங்னம் பாண்டங்களிலோ, சூரிய மண்டலங்கள்லோ அகப்படுவதில்லையோ அங்ஙனமே சித் ஆகாசம் சீவ உபாதிகளுக்குள் அகப்படுவதில்லை. உபாதியை முன்னிட்டு சீவான்மாவுக்குப் பெயரளவில் அணுத்துவம் அல்லது ஆணவம் உள்ளது. தன்னை ஒரு சீவன் என்று எண்ணிக் கொண்டிருக்கிற பொழுதும் அவன் உண்மையிலேயே சிவம். நிர்விகல்ப சமாதியில் இவ் வுண்மை விளங்குகின்றது.


               பாடல்-4 
  என்அணி யார்முலை ஆகம்
     'அளைந்துடன் இன்புறும் ஆகாதே. (அடி-1)

-