பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருத்தில்லை அருளிச் செயல்கள்-2 271



விளக்கம் : உபாசகன் உபாசன மூர்த்தியோடு கொள்கின்ற இணக்கம் ஒப்பு உயர்வு அற்றது. அதில் ஊறுகின்ற இனிமையை எதனோடும் சீர்தூக்கி ஒப்புமை காண இயலாது. அப்பேரன்புக்கு ஈடு அதுவேதான். பக்தர்களுள் பெரும் பாலோர் பரமனுடைய சாந்நித்தியத்தை (இருப்பை)த் தங்கள் உள்ளத்தின் உள்ளேயே உணர்கின்றனர். ஒட்டி உறவாடுதலும் உள்ளத்தின் உள்ளேயே நிகழ்கின்றது. மணிவாசகப் பெருமானும் ஒயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானை (திருவம்-7) என்று இயம்புவது அநுபூதியின் விளைவு எனக்கோடலே ஏற்புடைத்து.

உள்ளத்தினுள் ஞானக்கண்ணுக்கு இலக்கு ஆகின்ற இட்ட மூர்த்தி யாரோ சில அன்பர்க்குப் புறத்திலும் திருமேனி தாங்கித் திகழ்வதுண்டு. அகத்தில் இறைவனோடு உரையாடிப் பூரிப்பது போன்று புறத்தில் புலனாகின்ற அவ னோடு பேச்சு வார்த்தை வைப்பதுண்டு. சைவகுரவர் நால்வர் வாழ்க்கையிலும் இத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெற்றதை அவர்கள் வரலாற்றால் அறியலாம். இங்ஙனம் புறத்தில் புலனாகின்ற மேனியின் பொலிவோ பகர வெண்ணாதது. இங்கு அமைந்துள்ள சொல்லோவியம் அப்பேரழகிற்கு ஒருவாறு உகந்ததாயுள்ளது. பொன்னார் மேனியழகிற்கும் அதைப் புகழுதற்கென்று பொங்கி எழுகின்ற மொழியழகிற்கும் நிர்விகல்ப சமாதியில் இடம் இல்லை. அப்பெரு நிலையை எட்டிய பெருமக்கள் எல்லார்க்கும் ஒப்ப முடிந்த முடிவு இது.

மணிவாசகப் பெருமானுக்குத் தமது வழிபடு தெய்வமே திருமேனி தாங்கிக் குருமூர்த்தியாக எழுந்தருளிற்று. இராமகிருஷ்ண பரமஹம்சருக்கு அவருடைய வழிபடு தெய்வமாகிய அகிலாண்டநாயகியே திருமேனி தாங்கியிருந்து தனது செல்வனைப் பரிபாவித்து வந்தாள். தாய்க்கும் சேய்க்கும்