பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

290 மாணிக்கவாசகர்


10. புணர்ச்சிப் பத்து என்பதையும் அடிகள் அருளிச் செய்கின்றார். இவற்றைத் தொடர்ந்து,

  11. அருட்பத்து         12. திருவார்த்தை 
13. எண்ணப் பதிகம் 14. திருவெண்பா
15. திருப்பள்ளி எழுச்சி 16. திருவேசறவு
17. ஆனந்த மாலை 18. உயிருண்ணிப் பத்து
19. பிரார்த்தனைப் பத்து 20. திருப்பாண்டி விருத்தம்

ஆகிய பனுவல்களைப் பாடிப் போற்றுகின்றார். இறைவன் ஆணைப்படி பொய்கைச் சோதியில் அடியார்கள் கலந்து மறைந்ததைக் கண்டு வருந்தி,

21. திருச்சதகம் என்ற பனுவலை அருளிச் செய்கின்றார். பின்னர் அடிகள் திருவுத்தரகோச மங்கைக்கு வருகின்றார். அங்கு,

22. நீத்தல் விண்ணப்பம் என்ற பனுவலை அருளிச் செய்கின்றார். இறைவன் இவரை ஆட்கொண்ட குரு உருவத்துடன் காட்சி தருகின்றார். இதனைத் தரிசித்த அடிகள் அங்கிருந்து புறப்பட்டுத் தெய்வத் திருத்தலங்கள் பலவற்றையும் சேவித்துக் கொண்டு சோழநாட்டை அடை கின்றார். திருவிடைமருதூர்1 இறைவனை இறைஞ்சித் திருவாரூர் வந்து இறைவனைப் பணிந்து,

23. திருப்புலம்பல் பாடுகின்றார். பின்னர் சீகாழியை அடைந்து இறைவனை வணங்கி,


1. இடைமருதூர் : இத்திருத்தலம் மயிலாடுதுறை - தஞ்சை வழியில் ஓர் இருப்பூர்தி நிலையம், வரகுண பாண்டியன் பெரும் புகழ் வரலாற்றுத் தொடர்புடையது. பட்டினத்தார் வழிபட்ட தலம், அவர் அருளிய மும்மணிக்கோவை பெற்றது. இங்குத் தைபூசத்தன்று காவிரியில் நீராடுதல் சிறந்தது.