பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

296 மாணிக்கவாசகர்



திருமுறை என ஒரு திருமுறையாக முந்தைய சான்றோர் தொகுத்தமைத்திருத்தலை மேம்போக்காக நோக்கும்போதே இவை இரண்டும் ஒருவராலேயே அருளிச் செய்யப் பெற்றவை என்னும் உண்மை தெளிவாகப் புலனாகும். இந்தச் செய்தியை பெரும்பற்றப்புலியூர் நம்பியும் கடவுண் மாமுனிவரும் தம் தம் புராணங்களில் தெளிவாகக் குறிப்பிட் டுள்ளனர்.

சிவஞானபோதம் என்ற மெய்கண்டார் நூலில் எட்டாம் சூத்திரம் ஐம்புலவேடர்களோடு பழகி அறிவு திரிந்து தம் உண்மை நிலையையும் கடமையையும் அறியாமல் அலையும் அரசகுமாரனாகிய ஆன்மாவுக்கு இறைவனே குருநாதனாக எழுந்தருளி உண்மை உணர்த்தி ஆட்கொள்வர் என்றும், அங்ஙனம் ஆட்கொள்ளப் பெற்ற ஆன்மாக்கள் ஆனந்தாதுபவ நிலையில் அரன்கழல் செல்லும் என்றும் தெரிவிக்கின்றது. எட்டாம் திருமுறையில் சேர்க்கப்பெற்ற இந்நூல் ஐம்புல இன்பத்துள் ஆரத்துய்க்கும் அரச வாழ்வில் அமைச்சர் பதவியில் சிக்கி, பிறந்ததன் பயனைச் சிறிது மறந்திருந்த ஆன்மாவாகிய வாதவூரடிகட்கு இறைவன் குருமூர்த்தியாக எழுந்தருளி உண்மை ஞானத்தை உணர்த்த அதன் விளைவாக எழுந்த அநுபவஞானத்தை உணர்த்தும் பாங்கில் அமைந்துள்ளது இத்தெய்வத் திருநூல்.

  அருபரத் தொருவன் அவனியில் வந்து
  குருபர னாகி அருளிய பெருமையை -
                                -போற்றித்திரு. (75-76) 

என்று அடிகளே இந்நிகழ்ச்சியைத் தம் வாக்கால் புலப் படுத்துவர்.

1. திருவாசகம்

திருவாசகம் என்ற பெயர் திருவுடைய சொற்களால் ஆகிய அருள் நூல் என்ற பொருள் தருவது. திருத்தக