பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

798 மாணிக்கவாசகர்



திருவாசகத்தை முழுவதையும் ஓதி உளம் கரைய அநுபவித்து அதன் சுவையூற்றுகள் தோறும் தோய்ந்து அதற்கு ஒப்புமை பற்றிச் சிந்தித்து இறுதியில் தேனை ஒப்பாகக் கொண்டார், சான்றோர் ஒருவர். சுவைக்காக மட்டிலும் தேனைக் கூறினார் என்று கருதுவதற்கில்லை இனிய பொருள் பலவற்றுள்ளும் தேனைக் கொண்டதில் ஒரு தனிச்சிறப்பு உண்டு என்று கருதலாம். தேன் நெஞ்சுக்கு வலிவூட்டும். குரல் இனிமை மிகுவிக்கும். பித்தம் தணிக்கும். நோய் தீர்க்கும். அதுபோல திருவாசகத்தேன் உயிருக்குச் சிவஞான உணர்வாகிய வலியையூட்டும். சேயின் குரல்போல இனிமையாகிச் சிவத்தாய்க்குக் கருணையை மிகுவிக்கும்; உயிர்கள் எல்லாவற்றிற்கும் இனியன் ஆக்கும். மிகுதியும் தோய்ந்தால் விளையும் பயனை,

  தொல்லை விரும்பிறவிச் சூழுக் தளைநீக்கி 
  அல்லலறுத் தானந்தமாக்கியதே-எல்லை 
  மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன் 
  திருவா சகம்என்னும் தேன். 

என்ற வெண்பாவால் புலப்படுத்துவர்.

தாயுமான அடிகள் திருவாசகம் முழுவதும் கற்கண்டாற் செய்த பாவைபோல் இருத்தலின் அதனை முழுதும் சுவைத்து ஒருபானை சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பது போல், "நினைப்பற நினைந்தேன்', 'சென்றுசென்றணு வாய்த்தேய்ந்து தேய்ந்தொன்றாம்" (கோயில் திரு. 7) "ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்சோதி" (திருவெம்-1) என்ற பகுதிகளை மட்டிலும் சுவைத்து இன்புறுவதைப் பராபரக்கண்ணியில் கண்டு மகிழலாம்.


1. பராபரம்-அறிஞர்உரை 6,7,8.