பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருளிச் செயல்கள் 299



இராமலிங்க அடிகள் திருவாசகத்தையே உபாசனா மூர்த்தியாகக் கொண்டு அதனையே படித்து அதனாலேயே அகங்கரைந்தவர். இதனாலேயே அவரது திருப்பாடல்கள் முழுவதும் திருவாசகம் போலவே மனங்கரைக்கும் மாண்புடையனவாய்த் திகழ்கின்றன. திருவாசகத்தை எண்ணும்தோறும் காமம் மிக்க காதலனுடைய கலவியை விரும்புகின்ற கற்புடைய மங்கையானவள் அடையும் இன்பத்தைக் காட்டிலும் இன்பம் மிகுகின்றது என்பர். 2

  வான்கலந்த மாணிக்க
     வாசக நின் வாசகத்தை 
  நான்கலந்து பாடுங்கால்
     நற்கருப்பஞ் சாற்றினிலே 
  தேன்கலந்து பால்கலந்து
     செழுங்கணிதீஞ் சுவைகலந்து 
  ஊன்கலந்து உயிர்கலந்து
     உவட்டாமல் இனிப்பதுவே. 3

என்று ஈடுபட்டுப் பேசுவர். இன்னும் "திருவாசகத்தைச் செவிமடுத்தால் கீழ்ப்பறவைச் சாதிகளும் பொல்லா விலங்குகளும்கூடச் சிவஞானத்தின்மீது நாட்டமுறும்போது அடியேன் அதனை அடைதல் வியப்பா?" என்கின்றார்.

துறைமங்கலம் சிவப்பிரகாச அடிகள் கற்போர் உள்ளத்தைக் கரைக்கவல்ல திருவாசகத்தைப் பற்றி,

  திருவா சகமிங் கொருகால் ஒதின் 
  கருங்கல் மனமும் கரைந்துகக் கண்கள் 
  தொடுமணற் கேணியின் சுரந்துநீர் பாய 
  மெய்ம்மயிர் பொடிப்பு விதிர்விதிர்ப் பெய்தி 
  அன்பர் ஆகுநர் அன்றி 
  மன்பதை உலகில் மற்றையர் இலரே. 4

2. ஆளுடைய அடிகள் அருள் மாலை - 6. 3. க்ஷ - 7 4. நால்வர் நான்மணி மாலை - 4