பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

300 மாணிக்கவாசகர்



மனோன்மணிய ஆசிரியர் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள் சர்வ சங்காரகாலத்து உண்டாகும் தனிமையைக் கழிப்பதற்காகவே திருவாசகத்தின் ஒரு படியைத் தில்லை நடராசப் பெருமான் எழுதிக் கொண்டார் போலும் என்று திருவாசகத்தின் பெருமையைப் பேசுகின்றார்.

   கடையூழி வருந்தனிமை
      கழிக்கவன்றோ அம்பலத்தில்
   உடையார் உன் வாசகத்தில் 
      ஒருபிரதி கருதினதே 5

என்ற தாழிசையில் இதனைக் காணலாம்.

பழமொழிகள் போற்றல்: ஒரு கொள்கை அல்லது ஒருநூல் பொதுமக்கள் உள்ளத்தைப் பிணித்துள்ளது என்பதனை நாடிபோல் காட்டுவன நாட்டில் வழங்கும் பழமொழிகள். இப்பழமொழிகள் கற்றாரும் மற்றாருமாகிய எல்லோர் வாயிலும் ஒப்பப் பழகிவருவன. ஆகையால் திருவாசகத்தைப் பற்றிய இத்தகைய பழமொழிகள். யாவை என்பதை ஈண்டுக் காண்போம். "திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" என்பது ஒரு பழமொழி. மக்களின் மன உறுதியை அளந்தறியும் அளவு கோலாகத் திருவாசகத்தைக் கருதி யிருந்தனர். ஆதலால் மனத்தையுருக்கும் மாண்புடையது திருவாசகம்: அதற்கு உருகாதார் மனம் இரும்பினும் வலியது என்று உணர்ந்தபின்னரே இப்பழமொழி தோன்றியது போலும். 2. "சிதம்பரத்தில் பிறந்த பிள்ளைக்குத் திருவெம்பாவை கற்றுக் கொடுக்க வேண்டுமா?" இப்படி மற்றோரு பழமொழி. திருவெம்பாவை திருவண்ணாமலையில் அருளிச் செய்யப்


5. மனோன்மணியம் - காப்பு.