பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருளிச் செயல்கள் 313



தன்மைத்தாகலின் பெரிதும் மாயத்தையுடையதாய் எனது நிலை பெறும் உயிர் வந்து தோன்றாநின்றது எனவேறும் ஒரு பொருள் விளங்கியவாறு கண்டு கொள்க’ எனப் பேராசிரியர் இப்பாடவில் தோன்றிய மற்றொரு பொருளை யும் எடுத்துக் காட்டுவர். 7

இவண்கூறிய இரண்டாவது பொருள் மணிவாசகப் பெருமான் திருப்பெருந்துறையில் தமக்குக் குருவாக எளி வந்து அருள் செய்து மறைத்தருளிய இறைவன் மீண்டும் தம் கண்காண எழுந்தருளிய அற்புத நிகழ்ச்சியினை நினைந்து வியந்து போற்றும் நிலையில் அமைந்திருத்தல் அறிந்து மகிழத் தக்கதாகும். அகத்தினையொழுகலாற்றுக் குரிய கிளவித்தலைவன், தலைவியைத் தன் உயிரெனக் கண்டு வியந்துரைப்பதாக அருளிச் செய்யப் பெற்ற இத்திருப்பாடலில், அடிகள் தம்மை வலிய வந்து ஆண்டருளிய இறைவனை நினைந்து அம்முதல்வனது திருவருளை வியந்து போற்றுதலாகிய இப்பொருளும் வெளிப்பட்டுத் தோன்று மாறு அமைத்த நுட்பம், உய்த்துணர்ந்து போற்றத் தக்கது. திருவாசகம், திருக்கோவையார் என்ற அடிகள் அருளிய இரண்டு நூல்களை ஆழ்ந்து கற்றலால் தேறிய உண்மை இது: அடிகள் தாம் பாடியருளிய திருவாசகத் திருப்பாடல்களில் இறைவனைத் தலைவனாகவும் உயிராகிய தம்மை அவனருள் விழையும் தலைவியாகவும் கொண்டு அன்புடன் போற்றியுள்ளார். திருக்கோவையாரில் வரும் அகப்பொருள் ஒழுகலாற்றுக்குரிய தலைவியைப், 'பெருந்துறைப் பிள்ளை’ எனப் பெயரால் குறித்துள்ளார். 'பெருந்துறைப்பிள்ளை’ என்னும் இப்பெயர் அடிகளைக் குறித்து வழங்கும் பெயரென்பது திருந்திய அன்பிற்பெருந்துறைப் பிள்ளையும் என


7. இங்ஙனம் வேறு ஒரு பொருள் பொதிந்திருப்பதை 158, 281, 349, 352, 365, 394 என்ற எண்ணுள்ள பாடல்களில் கண்டு மகிழலாம்.