பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

318 மாணிக்கவாசகர்



என்றும் கூறுவது காண்க. தீட்சை பெற்றதும் பரஞானம் வந்தெய்தப்பெற்று மணிவாசகர் சிவஞானச் செல்வராகிக் கலை ஞானத் தெய்வமாகிய நாமகள் நாவில் அமர, ஆணவம் முதலிய மும்மலங்களும் அகல, இறைவன் பணித்த வண்ணம் பாடினார் என நம்பி திருவிளையாடல் கூறுகின்றது. எனவே, இந்த ஞானச் செல்வர்கள் யாவரும் இறையருளால் பாடினதாகவே வரலாறுகள் கூறுகின்றன. எனவே, இப்பாடல்கள் அவர்தம் அருள் வாழ்க்கையிலிருந்து மலர்கின்றன என்பதை அறிகின்றோம்.

வாதவூரடிகள் தம் வாழ்க்கையைத் தம் பாடல்களில் புலப்படுத்துவதற்காகப் பாடல்களை எழுதினாரல்லர். தம் வரலாற்றைப் பாடல்களாக எழுதியிருந்தால் அது தன்வரலாறாக முடிந்திருக்கும். ஆனால், அவர் அருளிய திருப் பாடல்கள் சிவானந்த அநுபவத்தில் திளைத்துத் தேக்கிட்டு அந்த அதுபவத்தின் வாயிலாக வெளிவந்தவை. அங்ங்ணம் வெளிவந்த பாடல்களில் அத்தி பூத்த மாதிரி அங்கொன்றும் இங்கொன்றுமாக அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் அமைகின்றன. அவற்றை மட்டிலும் ஈண்டு எடுத்துக்காட்ட முயல்வேன்.

முன்னைய பிறப்பு : மணிவாசகப் பெருமான் இம் மண்ணுலகில் தோன்றுவதற்குமுன் எங்ஙனம் இருந்தார் என்பது பற்றிய குறிப்புகள் திருவாசகத்தில் இடம் பெற்றுள்ளன. இறைவன் திருவருள் கைவரப்பெற்றபின் பழைய நிலையை உணரும் ஆற்றல் அடியார்கட்கு வாய்ப்ப துண்டு. தம்பிரான் தோழர் வாக்கினில் இத்தகைய குறிப்புகள் வெளிப்படுவதை அவர் இயற்றிய தேவாரப் பாடல்களில் காணமுடிகின்றது. அதுபோலவே, இங்கும் அடிகளின் வாக்கிலேயே சில குறிப்புகள் வெளிப்படுகின்றன.