பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருளிச் செயல்களில் அடிகள் 327



என்று சித்தாந்தம் பேசும். இந்நிலை எய்திய உயிர்களுக்கு ஆணவ மலம் கழன்றொழியும் நிலை ஏற்படும். இந்நிலையை மலபரிபாகம் என்று வழங்குதல் மரபு. இந்த இரண்டு நிலைகளும் வந்தெய்தும் வாய்ப்பு ஏற்பட்ட பிறகு உயிரின் அறிவின்கண்ணே இறைவனது திருவருள் பதியப்பெறும். இந்நிலையைச் சந்தி நிபாதம் என்று வழங்குவர். நிபாதம் - வீழ்ச்சி; சத்தி - பதிதல். இது நான்கு விதத்தில் நிகழும், வாதவூரர் நான்காவது சத்திநிபாதமாகிய முடிந்த நிலையில் திருப்பெருந்துறையில் குருமூர்த்தியைக் கண்டு இறைஞ்சியதாகக் கடவுள் மாமுனிவரின் திருவாதவூரர் புராணம் கூறும். இருவினையொப்பு வந்தெய்திய நிலையே குருநாதனைக் கண்டு மகிழ்வதற்குரிய செவ்வி என்பதனை அடிகள் தமது வாழ்க்கை நிலையில் வைத்து,

 உணக்கி லாததோர் வித்து மேல்விரை
    யாம லென்வினை யொத்தபின் 
  கணக்கி லாத்திருக் கோல நீவந்து
     காட்டி னாய்கழுக் குன்றிலே (466)
                           -திருக்கழுக்-1

என்று விளக்கிய திறம் இங்கு நினைவுகூரத்தக்கது. ஆன்மாக்கள் மூவகைப்படுவர். ஆணவமலம் ஒன்றே யுடைய விஞ்ஞானகலருக்கு உயிர்க்குயிராய் உள் நின்றும், ஆணவம், கன்மம் என்னும் இருமலமுடைய பிரளயாகலருக்கு அம்மையப்பராய் முன்னின்றும் ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களுமுடைய சகலருக்கு மானுடத்திருமேனி கொண்டு படர்க்கையில் நின்றும் இறைவன் சிவஞானம் நல்குவன் என்று சித்தாந்த நூல்கள் கூறும்.3 இம்மரபின்படி சிவபுெமான் மானுடத் திருமேனி கொண்டு குருநாதராய் வந்து அடிகட்குத் திருவடி ஞானம் வழங்கி ஆட்கொண்டருளினன் என்பது வரலாறு இச்செய்தி,


3. சுப்புரெட்டியார், ந: சைவசமய விளக்கு - பக். 321.