பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

332 மாணிக்கவாசகர்


 என வரும் திருவாசகப்பாடற் பகுதிகளில் இனிது புலனாவதைக் கண்டு மகிழலாம்.

இங்ஙணம் சிவாதுபவக் கடலில் திளைத்து இன்புறும் மணிவாசகப் பெருமான் குதிரை வாங்குதற் பொருட்டுக் கொண்டுவந்த செல்வம் எல்லாவற்றையும் இறைவன் தம்மைத் திருப்பெருந்துறையில் ஆட்கொண்ட அன்றே அப்பெருமானிடம் ஒப்புவிக்கின்றார். இதனை,

  அன்றே யென்றன் ஆவியும்
     உடலும் உடைமை எல்லாம் 
  குன்றே யனையாய் என்னையாட்
     கொண்ட போதே கொண்டிலையோ (500)
                               - குழைத்த - 1 


எனவரும் அவரது திருவாக்கால் நன்கு விளங்கும். இங்ஙணம் தம் உடல் பொருள் ஆவி அனைத்தையும் குருநாதனுக்கு உரிமையாக்கி அவர் பணித்த வண்ணம் அப்பொருளை இறைவன் திருப்பணிக்கும் அடியார்கட்கும் செலவிடுகின்றார். இதனை,

  கொம்மை வரிமுலைக்
     கொம்பனையாள் கூறனுக்குச் 
  செம்மை மனத்தால்
     திருப்பணிகள் செய்வேனுக்கு (566)
                               -குலாப்-10 

எனவரும் குலாப்பத்துப் பாடற்பகுதியாலும்,

                              தன்சீரடியார் 
  குலப்பணி கொள்ளஎனைக் கொடுத்தேன்
                                --திருக்கோ.54 

என வரும் கோவைத் தொடராலும், தம்மைப்பற்றிக் கூறும் குறிப்புகளால் ஒருவாறு உய்த்து உணரலாம்.