பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெருந்துறை நிகழ்ச்சிகள் 23



வாதவூரரின் நிலையை நன்கு அறிந்த கண்ணுதலப்பன் தம் கருணையினால் ஒர் அந்தணத் திருமேனி கொண்டு தம் திருவடியினைப் பிரியாத 999 சீடர்களோடும் திருப்பெருந்துறையின்கண் வந்து ஒரு குருந்த மரத்தடியில் தங்குகின்றார். இதனை,

   சந்தமறை தீண்டரிய தங்கருணை யாலோர்
   அந்தணர் குலக்குரவ னாகியடி நீங்கா 
   மைந்தர்பலர் தம்மொடு பெருந்துறையில் வந்தோர் 
   கொந்தலர் நெருங்கிய குருந்தடி யிருந்தார். 6

என்று கூறுவர் பரஞ்சோதி முனிவர். இந்நிகழ்ச்சியினை,

    அருபரத் தொருவன் அவனியில் வந்து 
    குருபர னாகி யருளிய பெருமையைச் 
    சிறுமையென் றிகழாதே திருவடி யிைைணயப் 
    பிறிவினை யறியா நிழலது போல 7

என்றும்,

    உணக்கி லாததொர் வித்து மேல்விளை
    யாம லென்வினை யொத்தபின் 
    கணக்கி லாத்திருக் கோல நீவந்து
    காட்டி னாய்க்கழுக் குன்றிலே 8

என்றும் அடிகளே. விளக்குவதைக் காணலாம்.

வாதவூரர் திருப்பெருந்துறையை நெருங்க நெருங்க அவருக்கு மகிழ்ச்சிப் பெருக்கு நிறைகின்றது என்றும், கூப்பிய கைகள் தாமாக முடியின்கண் ஏறுகின்றன என்றும், ஆனந்தக் கண்ணிர் துளிக்கின்றதென்றும் விளக்குவார் பரஞ்சோதியார். மேலும், வாதவூரரிடம் நான்காவதாகிய தீவிரதர சத்தி


6. வாதவூரடிகளுக்கு- 8

7. திருவா. போற்றித் திருவகவல்-அடி 75-78

8. டிெ திருக்கழுக்குன்றப் பதிகம்-1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/41&oldid=1012242" இலிருந்து மீள்விக்கப்பட்டது