பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40 மாணிக்கவாசகர்




  வீடு தத்தென்றன் வெந்தொழில் வீட்டிட
     மென்மலர்க் கழல் காட்டி 
  ஆடு வித்தென தகம்புகுந் தாண்டதோர்
     அற்புதம் அறியேனே (5) 

(மாடு செல்வம், ஏறுண்டு - தாக்கப்பெற்று, குலாவி விளங்கி)

என்பது ஐந்தாம் பாடல். ஒவ்வொரு பாடலும் அற்புதம் அறியேனே என்று இறுகின்றது. இத்திருப்பதிகப் பாடல் தோறும் தம்முடைய சிறுமையையும் பெருமறை தேடிய அரும்பொருளாகிய இறைவன் தம்பொருட்டுக் குருத் திருமேனி கொண்டு வெளிப்பட்டுத்தோன்றிச் சிவஞானத்தை உபதேசித்தருளிய அற்புத நிகழ்ச்சியையும் ஒருங்கு குறித்துள்ளமை கண்டு மகிழலாம். "தையல் அநுபவம் கூறுதல் நைச்சியாநு சந்தானம்", எனக் கொள்ளலே பொருந்தும்.

குருவருளால் பரஞானம் கைவரப்பெற்றுச் சிவஞானச் செல்வராகின்றார். ஆசிரியத் திருமேனிகொண்டு இறைவனால் திருவடி தீட்சை செய்யப்பெற்று அதனை ஏற்றுக் கொண்ட சென்னியை வியந்து சென்னிப்பத்து பாடுகின்றார்.

சென்னிப் பத்து (42) :

சென்னிப்பத்தில் "சிவவிளைவு-சீவனுக்கு நிச்சயப்படுத்தல்" என்பது பழைய குறிப்பு. இறைவனுடைய திருவடிகள் தமது சென்னியில் விளங்கும் முறையை விளக்குவது சென்னிப் பத்து. குருநாதன் திருவடி சூட்டியதால் தாம் பெற்ற சுகத்தை வியந்து கூறியது சென்னிப் பத்து என்று கூறும் திருப்பெருந்துறைப் புராணம். சிவபெருமான் குருவாக எழுந்தருளித் தம்சென்னியில் திருவடி சூட்டும் பேறு பெற்றதால், அச்சிறப்பினைத் தம்முடன் உள்ள அடியார்களுடன் மகிழ்ந்து பரவிப் போற்றும் முறையில் இத்திருப்பதிகமே அமைகின்றது. இறைவன் குருவாகி வந்து தன் திருவடிகளை அடிகளின் சென்னியில் சூட்டிய செய்தி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/58&oldid=1012350" இலிருந்து மீள்விக்கப்பட்டது