பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெருந்துறை அருளிச் செயல்கள் 49


 எல்லாப் பொருள்களோடும் தான் பிரிவறக் கலந்து நிற்பினும் அவற்றின் தன்மை தனக்கு எய்தலின்றியும் இருப்பான். அஃதாவது அணுவினும் மிக நுண்ணியனாய், மிக மிக அணுகி மறையும் நுண்மை நிலையினனாக இருப்பான். உலகெலாம் ஆகி ஒரு பொருளாய்த் திகழும் திறத்தினை சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாம் என்பதால் புலப்படுத்துவர். இங்ங்ணம் இறைவன் உலகெலாம் ஆகி நிற்பினும் உலகப் பொருள்கள் ஒன்றினும் தோய்வின்றி உள்ளான் என்பதை ஒன்று நீ அல்லை என்று தெரிவிப்பார். எவ்வகைப் பொருள்களும் இறைவன் சார்பின்றித் தாமே தனித்து நிற்கும் ஆற்றல் உடையன அல்ல என்பது அன்றி ஒன்று இல்லை என்பதால் தெளிவாகின்றது. இங்ஙனம் அனைத்துமாய் அவை யல்லையாய் நிற்கும் இறைவனைத் தம் ஆன்ம போதம் (தற்போதம்) இழந்து இறைவன் அருளின்வழி அடங்கிய சிவஞானிகளேயன்றித் தம்முணர்வினராகிய ஏனையோர் யாவரும் அறியவல்லாரல்லர். இதனை யார் உன்னை அறிய கிற்பார் என்பதால் தெளிவுறுத்தப் பெறுகின்றது. இங்ஙனம் இறைவனது அருள்வழி நின்று அவனை உணர்ந்து மகிழும் இந்நெறியின் சிறப்பினைத் தாயுமானவர்,

  சென்றுசென் றேயணுவாய்த்
     தேய்ந்துதேய்க் தொன்றாகி 
  நின்றுவிடும் என்றநெறி
     நிற்கும்நாள் எந்நாளோ? (7)  

என்று விளக்கிய நுட்பம் ஈண்டு நினைவுகூரத் தக்கது.


புணர்ச்சிப் பத்து (27)

திருப்பெருந்துறையில் குருவாக எழுந்தருளி வந்து ஆட்கொண்டருளிய இறைவனைப்


8. க்ஷ.க்ஷ 7.

9. திருவாதவூர் புராணமும் இது திருப்பெருந்துறையில் அருளிச்செய்யப்பெற்றதாகவே செப்பும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/67&oldid=1012365" இலிருந்து மீள்விக்கப்பட்டது