பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெருந்துறை அருளிச் செயல்கள் 59


13. பாண்டிவிருத்தம் (36)

அடிகள் திருப்பெருந்துறையில் எழுந்தருளிய காலத்து தென்பாட்டி நாட்டானாகிய சிவபெருமான் குதிரையின்மீது அழகராக எழுந்தருளி வந்து ஆட்கொண்ட அருமைப்பாட்டினை வியந்து அருளிச் செய்தது. இது "பாண்டிப் பதிகம்" என்றே வழங்கப்பெறுகின்றது. இறைவன் பாண்டிப் பிரானாக எழுந்தருளிய போது தமக்கு உண்டாகிய சிவானந்த விளைவினை அடிகள் விரித்துரைத்தலால் இதற்குச் "சிவானந்த விளைவு-சுகமேலிடு" என முன்னோர் கருத்துரை வரைந்துள்ளனர்.

  புரவியின்மேற் பாண்டியன்முன் வரும்பதத்தை
     யாம்பெரும் அற்புதம்போல் யாரும் 
  விரவுமின்கள் என்றடியார்க் குறுதிசொலல்
     திருப்பாண்டி விருத்த மாமே.

என்பது திருப்பெருந்துறைப்புராணக் கூற்று. தாம் பெற்ற சிவானந்த விளைவை எல்லாரும் பெறுமாறு அடியார்கட்கு உறுதி கூறுவது இப்பனுவல்.

இப்பதிகத்தின் இரண்டு பாடல்களில் ஆழங்கால் நாடுவோம்.

  சதுரை மறந்தறி மால்கொள்வர்
     சார்ந்தவர் சாற்றிச்சொன்னோம் 
  கதிரை மறைத்தன்ன சோதி
     கழுக்கடை கைபிடித்துக் 
  குதிரையின் மேல்வந்து கூடிடு
     மேற்குடி கேடுகண்டிர் 
  மதுரையர் மன்னன் மறுபிறப்
     போட மறித்திடுமே (2)

(சதுர்-சாமர்த்தியம்; அறிமால் - ஞானப்பித்து: சோதி சோதிவடிவினன்; கழுக்கடை - சூலம்; குடிகேடு - குடியின்கட் பிறத்தலின் அழிவு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/77&oldid=1013178" இலிருந்து மீள்விக்கப்பட்டது