பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68 மாணிக்கவாசகர்


சிவபெருமான் அடியார்க்கு எளியவன். அருச்சுனனுக்காக அவன் காட்டில் வேடனாக வந்தான். கடலில் வலையவனாக வந்தான். நாட்டில் நமக்காகக் குதிரைப் பாகனாக பரிமேலழகனாக-வந்தான். அவனை வழுத்தினால் வினையும் அஞ்ஞான இருளும் ஒழியும்' (3). சிவவழிபாட்டின் வாயிலாக பக்தன் நிலைபெற்ற திருவடி வாழ்வினைப் பெறலாம். இது முத்திக்கு வித்தாகின்றது (4). சித்தமிசை நீங்காது குடிகொண்டிருக்கும் சிவசக்தியைச் சார்ந்திருக்குமளவு துன்பங்கள்மறைந்தொழிகின்றன (5). உள்ளத்தினுள் அந்தர்யாமியாய் அமர்ந்திருந்து ஆங்கு எழுகின்ற எண்ணங்களுக்கெல்லாம் சாட்சியாயிருப்பவனைச் சாருமளவு நம்வாழ்வு நல்வாழ்வு ஆகின்றது (6). பரமசிவனை மாசிலாமணி (அல்லது தோஷரகிதன்) எனலாம். அவன் நாதாதீதன். அத்தகைய பெரிய பொருள் என்நெஞ்சில் நீக்கமற நிறைந் துள்ளான். எனக்கு நன்மையே செய்யும் அவனைப் பற்றிப் பேசவேண்டும். பிறவிப்பிணியைப் போக்கும் அமுதமாய் இருக்கின்றான் அவன் (7)

11. ஆனந்தமாலை (50)

ஆராஅன்புடைய மெய்யடியார்களுடன் கூடிய பெருமானது பேரானந்தத்துப் பிரியா திருக்கப் பெறும் இன்பத்தின் இயல்பினை, விரும்பியுரைப்பதாக அமைந்துள்ளது. ஆதலால் இது "ஆனந்தமாலை" என்னும் திருப்பெயர் பெறுகின்றது. மாலை-இயல்பு. இது தொல்காப்பியத்தால் (தொல். சொல் உரி-13) அறியப் படும். சிலம்பில் உள்ள "துன்ப மாலை" என்னும் தலைப்பினைப் போன்று இன்பத்தின் இயல்பினை விளக்கும் இப்பனுவல் "ஆனந்த மாலை" என்றாகின்றது. இதற்குச் "சிவாநுபவ விருப்பம்-அதாவது சிவாநந்த மேலிட்டில் கிரியா சக்தி அழிவு உரைத்தல்" என்று முன்னையோர் கருத்துரைப்பர். திருப்பெருந்துறைப் புராணமும் "மோகமிகும் அடியா ரொடுங் கூட விரும்பியது ஆனந்தம்" என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/86&oldid=1013514" இலிருந்து மீள்விக்கப்பட்டது