பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெருந்துறை அருளிச் செயல்கள் 71


 செறிவாகிய அகத்தவப்பயிற்சியில்லார் ஆண்டான் சிவகுரவனாக எழுந்தருளி வந்து ஆட்கொண்டருளும் அருட்டிருக் கோலத்தினைக் கண்டு வணங்கும் கடன் எய்தார். அறிவு நெறி நில்லார் ஆண்டான் அறிமைத் திறம் பூண்டு காண்டலும் கருதலும் மீண்டு வருதலும் இல்லாப் பேரின்பம் பூண்டு பெருவாழ்வு எய்தார். வாராவுலகம்-வானோர்க்கும் உயர்ந்த உலகம். 'யான் எனது என்னும் செருக் கறுப்பான்’ (குறள்-346) எய்தும் பேரின்ப உலகம். சீலத்தார்க்கு மால் காட்டுதலும், நோன்பினர்க்கு வழிகாட்டுதலும் நெறியினர்க்குக் கோலங் காட்டுதலும், அறிவினர்க்குத் திருவடிப்பேறு அளித்து ஆட்கொள்ளலும் சிவபெருமான் திருவருளாகும். சீலமின்றி நோன்பின்றிச் செறிவேயன்றி அறிவின்றி என்ற தொடர்:

  செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
  ஆற்றின் அடங்கப் பெறின் (குறள்-123) 

என வரும் திருக்குறள் அடியொற்றி அமைந்திருப்பதைக் கண்டு மகிழலாம்.

  நரியைக் குதிரைப் பரியாக்கி
     ஞாலமெல்லாம் நிகழ்வித்துப் 
  பெரிய தென்னன் மதுரை யெல்லாம்   
     பிச்ச தேற்றும் பெருந்துறையாய் 
  அரிய பொருளே அவிநாசி
     யப்பா பாண்டி வெள்ளமே 
  தெரிய வரிய பரஞ்சோதி
     செய்வ தென்றும் அறியேனே (7)

(குதிரைப்பரி - குதிரையாகிய விரைந்து செல்லும் ஊர்தி: பிச்சது ஏற்றும் - திகைக்கச் செய்யும்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/89&oldid=1013526" இலிருந்து மீள்விக்கப்பட்டது