பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 151 உயிர்களை உய்வித்தலால், உமாதேவிக்கு மீனாட்சி, அங்கயற்கண்ணி என்னும் பெயர்கள் ஏற்பட்டதாகக் கூறுவது மரபு. மீனின் கண்பார்வையில் உள்ள ஆற்றல் போல, பொன்னாங் கண்ணியும் கண் பார்வைக்கு ஆற்றலைத் தருகிறது. அதாவது, முக்குக்கண்ணாடி வெளியிலிருந்து கண்ணுக்குத் தெளிவையும், கூர்மையையும், தொலைநோக்கையும் தருதல் போல, பொன்னாங் கண்ணி உள் சென்று இந்த வேலையைச் செய்கிறது. மூக்குக் கண்ணாடி கண்ணின் வெளியுறுப்பு; பொன்னாங் கண்ணி கண்ணின் உள் உறுப்பு. எனவே, பொன்னாங் கண்ணியைக் கண்ணின் ஒரு பகுதியாகவே கொள்ள வேண்டும். எனவே, மச்சத்தின் கண் பார்வையைப் போன்று பொன்னாங் கண்ணியாம் கண்ணும் ஆற்றல் உடைமையால் மச்சி எனப்பட்டது. இஃது ஒரு வகையில் பெயர்க் காரணமா யிருக்கலாம். பொன்னாங் கண்ணிக்கு மலையாளத்தில் மீனாங் கண்ணி என்ற பெயரும், சம்சுகிருதத்தில் மீனாக்ட்சி' என்ற பெயரும் மத்ஸ்யாக்ட்சி' என்ற பெயரும் தரப் பட்டிருப்பது ஈண்டு ஒப்புநோக்கத் தக்கது. மீன்-மத்சம் போன்ற கண்ணையுடையவள் என்பது இவற்றின் பொரு ளாகும். பொன்னாங் கண்ணிக்கும் மீனுக்கும் உள்ள பொதுத் தன்மை, கண் பார்வை ஆற்றல் தொடர்பானதே. (கட்டுரையாசிரியர் குறிப்பு: யான் நெடிது எண்ணி மச்சத்தின் (மீனின்) கண் போன்ற ஆற்றல் உடைமையால் மச்சி எனப்பட்டது எனக் காரணம் கண்டுபிடித்து முதலில் எழுதிவிட்டேன். பிறகு, தற்செயலாக ஒருநாள், முருகேச முதலியாரின் பொருட் பண்பு நூலைப் பார்த்தபோது, மேலே கூறியுள்ள மலையாளப் பெயரையும் வடமொழிப் பெயர்களையும் கண்டு மட்டில்லா வியப்பும் மகிழ்வும் எ ய்தினேன்.)