பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 23 உதவியாளராக - ஆதரவாளராக - நண்பராக வேண்டு மானால் ஒரு வகையில் கூறலாம். இதனை நன்கு அறிந்த தனால் தானோ, பிங்கல முனிவர் தம் பிங்கல நிகண்டில், 'குமுத சகாயன்' என்றும், மண்டல புருடர் தம் சூடாமணி நிகண்டில் குமுத நண்பன்' என்றும் திங்கட்குப் பெயர் கூறியுள்ளனர் போலும்! சகாயன், நண்பன் என்னுஞ் சொற்கள் கணவனைக் குறிக்கா அல்லவா? ஆனால் ஒருசிலர், மலர்களின் கணவராக வண்டுகளைக் கூறுவது வழக்கம். இதனை, 'காமர் செவ்விக் கடிமலர் அவிழ்ந்தது உதய குமரன் எனும் ஒரு வண்டு உணஇய' என்னும் மணிமேகலைப் பகுதியால் (18-59, 60) அறியலாம். அதாவது, மாதவியின் மகளாகிய மணிமேகலை என்னும் மலரை, சோழ இளவரசன் உதய குமரன் என்னும் வண்டு உண்ண விரும்புவதைப் பற்றிக் கூறுகிறது இப்பகுதி. இதனால், மலரைப் பெண்ணாகவும் வண்டை ஆணாகவும் கூறும் ஒருவகை மரபு உண்டு என்பது தெரியவரும். இத்தகைய இலக்கிய வழக்காற்றைப் பல சங்க நூல்களிலும் காணலாம். அங்ங்னமெனில், வண்டுகள் மலர்களின் கணவராக முடியுமா? முடியாது. உண்மையை ஆராயின், காய் காய்க்கும் பெண் மலர்களுக்கும் அவற்றின் கணவன்மார்களாகிய ஆண்மலர்களுக்கும் இடையே தூது செல்லும் தூதுவர்களே வண்டுகள் என்பது புலனாகும். இந்த வேலை செய்வதற்காக வண்டுகள் பெறும் கூலி - இல்லையில்லை பரிசு - இல்லையில்லை கையூட்டே (இலஞ்சமே) அவை உறிஞ்சும் தேனாகும். ஆண் பூவிலுள்ள மகரந்தப் பொடியை (Pollen) வண்டுகள் பெண் பூவுக்குக் கொண்டு வருதலால் பெண்பூக்கள் கருக்கொண்டு காய் காய்க்கின்றன - என்பதே உண்மையாகும்.