பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 47 'நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும் மையில் கமலமும் வெள்ளமும் நுதலிய செய்குறி யீட்டங் கழிப்பிய வன்முறை , ' (2–13,14, 15.) என்பது பரிபாடல் என்னும் நூலில் உள்ள ஒரு பாடல் பகுதியாகும். இவை யாவும் பேரெண்ணைக் குறிப்பன எனப் பரிபாடல் கூறுகிறது. தொல்காப்பியரும் இது குறித்துக் கூறியுள்ளார்: 'ஐ, அம், பல் என வரூஉம் இறுதி அல் பெயர் எண்ணும் ஆயியல் நிலையும்' (394) என்பது தொல்காப்பிய நூற்பா. தாமரை (ஐ), வெள்ளம் (அம்), ஆம்பல் (பல்) என்னும் எண்ணுப் பெயர்களை எடுத்துக்காட்டுகளாக, இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் உரைகளில் எடுத்துக் கொடுத்துள்ளனர். தாமரையாகிய பதுமத்தின் பெயரால் ஒரு வகை நிதி குறிப்பிடப்பட்டுள்ளது. குபேரனிடம் உள்ள ஒன்பது வகை நிதிகளுள் சங்க நிதி, பதும நிதி என்பனவும் அடங்கும். இலக்கியச் சான்று; அப்பர் தேவாரத் திருத்தாண்டகம்பொது: 'சங்க நிதி பதும நிதி இரண்டும் தந்து தரணியொடு வானாளத் தருவ ரேனும் மங்குவார் அவர் செல்வம் மதிப்போ மல்லோம் மாதேவர்க் கேகாந்தர் அல்ல ராகில்..' என்னும் பாடல் பகுதியால், பதும நிதி (தாமரை நிதி) என ஒரு நிதி உண்டென அறியலாம். இந்தத் தாமரையாகிய (பதும) நிதி தண்ணிரில் இருப்பதால், இது 'நீர் நிதி' என்னும் பெயர் பெற்றது. இஃதும் ஒரு வகைச் சொல் விளையாட்டு எனலாம்.