பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 100 பெரிய மருது சிவந்த மேனியர், கள்ளமற்ற நெஞ்சம் படைத்தவர்; எனவே, அவரை வெள்ளை மருது என மக்கள் கொள்ளை அன்போடு வழங்கியது முற்றிலும் பொருத்தமே சின்ன மருது, கருமையின் அழகைக் காட்டும் கவினுறு தோற்றமுடையவர். தமையனார்ஆஜானுபாகு தம்பியார் அவரைப் போன்றவரல்லர்; எனினும், எவர்க்கும் இளைக்காத அழகும் அறிவும் ஆண்மையும் படைத்தவர். சுருங்கச் சொன்னால், இராமனும் இலக்குவனும் போல்வார் பெரிய மருதுவும் சின்ன மருதுவும் என்னலாம். அவர்களின் புகழைக் கேள்வியுற்றார் அந்நாளில் சிவகங்கையை ஆண்ட அரசர். கேட்டுவேட்ட அவர் நெஞ்சம், நேரில் அவர்களைக் கண்டதும் கொண்ட இறும்பூதிற்கும் இறுமாப்பிற்கும் ஒர் எல்லை இல்லை. அவர், 'தெய்வத் தமிழ் மகளின் திருநுதலாய் விளங்கும் பாண்டி நாட்டின் திலகமெனத் திகழ்வது மறவர் நாடே. அத்திலகத்தின் நறுமணமாய்த் திகழ்வது சிவகங்கைச் சீமையே. அச்சீமையின் புகழுக்கு அமரத் தன்மை அளிக்க வல்ல வைரங்கள் இவர்களே, என மனமுவந்து மருதுபாண்டியரைப் போற்றினர். அந்நாள் முதல் தங்கள் தாயகமாகிய சிவகங்கைச் சீமையின் படை வரிசையிலும் - வரலாற்றுப் பெருமையிலும் மருது சகோதரர்கள் சிறப்பிடம் பெறலானார்கள்.