பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கடும்புயல் மருது சகோதரர்கள் சின்னஞ்சிறு குழந்தைகளாய் இருந்த நாளில் செந்தமிழ் நாட்டின் நிலை எவ்வளவு சீர் கேடுற்றிருந்தது என்பதைச் சென்ற இயலில் பெரிதும் கவனித்தோம். அந்தச் சீர்கேடான நிலை நாளுக்கு நாள் முற்றி வந்ததேயொழியச் சற்றும் குறையவில்லை. 1728ல் லாலி என்ற பிரெஞ்சு சேனாதிபதி மீண்டும் ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் தொடங்கினான். கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிதறிச் சிதறி நடைபெற்ற இப்போரில் தொண்டைமான் படைகள் நவாபுவின் சேனையுடனும் வெள்ளைப் படையுடனும் தோளோடு தோள் தொட்டு நின்றன. இந்நாள்களிலே தான் மபூஸ்கான் பேரும், பூசப்கான் பேரும் பெரிதும் அடிபட்டன. நவாபுவினிடமும் வெள்ளையரிடமும் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு புதுக்கோட்டைத் தொண்டைமான் துரை ஆடாத ஆட்டமெல்லாம் ஆடினான். இராமநாதபுரச் சீமைக்கும் சிவகங்கைச்சீமைக்கும் எதிராக நவாபுவும் தொண்டைமானும் சிறுகச்சிறுகச் செய்துவந்த அநீதிகள் பலவாகும். முகமதலியும் ஆங்கிலேயரும் திருச்சிக் கோட்டையில் தம் வெற்றிக் கொடியை நாட்டியபின் தென்பாண்டி நாட்டில் தமது அதிகாரத்தையும் ஆட்சியையும் வேரூன்றச் செய்ய அரும்பாடு படலாயினர். அவர்கள் முயற்சிகள் அனைத்திலும் புதுக்கோட்டைத் தொண்டைமானும் தஞ்சை அரசனும் மனமுவந்து ஒத்துழைத்தனர். சேதுபதிக்கும், நவாபு-ஆங்கிலக் கம்பெனிக்கும் எவ்வித உறவும் ஏற்படாமல் துண்டித்து வைத்திருப்பதில் தொண்டைமானும் தஞ்சை வேந்தனும் கண்ணும் கருத்துமாயிருந்தனர்; வெற்றியும் பெற்றனர். இச்சூழ்நிலையில் மறவர் நாட்டின் ஒரு பெரும்பகுதியாகிய இராமநாதபுரம் எந்த நிலையிலிருந்தது என்பதைக் காண்போம்: கட்டையத் தேவருக்குப்பின் இராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதிகள் நால்வர். அவர்களுள் முதல்வர் சிவகுமார முத்து விஜய இரகுநாத சேதுபதி, பன்னிரண்டு ஆண்டுகள் ஆட்சி புரிந்த இவர் காலத்தில் மறவர் சீமை கண்ட அறப்பணிகள் பல. புலால் உண்ணாமையைத் தலை சிறந்த அறமாக வாழ்நாள் முற்றிலும் போற்றி, சைவத்துரை எனப் புகழ் கொண்ட இவர், வாரிசின்றி இறந்தார். அதனால், இவர் ஆட்சியில் செல்வாக்கு மிக்க தளவாயாய் இருந்த வெள்ளையன் சேர்வைக்காரர் காலஞ் சென்ற கட்டையத் தேவரின் உறவினராகிய இராக்கத்தேவரைச் சேதுபதி ஆக்கினார்.