பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 பேராசிரியர் ந.சஞ்சீவி நவாபுவுக்குத் துணையாக, தொண்டைமானின் முறையீட்டையும் நவாபுவின் பாய்ச்சலையும் கண்ட வெள்ளையர், தஞ்சை அரசனை விரட்டினர். அவனோ, நான் செய்வது ஒன்றும் புதுவதன்று பரம்பரையாக நடக்கும் காரியந்தான். எங்கள் உடமையாகிய அநுமந்தக் குடியை மறவர் வேந்தன் பறித்துக் கொண்டான். அதை மீட்பதே எங்கள் நோக்கம். அதோடு சிவகங்கை மீதும் நாங்கள் சீற்றங் கொள்ளக் காரணம், எங்கட்குரிய யானைகளை அந்நாட்டரசர் கொள்ளை கொண்டுவிட்டதே. எனவே, வேறு வழியில்லாமல் போர்க்களம் புகுந்திருக்கிறோம்,' என்று பதில் கூறினான். முடிவாக நவாபு தன் மகன் உமாதுல். உமாராவை அனுப்பி, அவன் வாயிலாகத் தஞ்சை மீது படையெடுப்பில் வெற்றி கண்டான். அப்போது திருச்சிராப்பள்ளியிலே வெள்ளைப் படைகளுக்குத் தளகர்த்தனாய் இருந்தவன் ஜோசப்பு ஸ்மித்து. அவனோடு சேர்ந்து கொண்டு நவாபுவின் மகன் 1771 செப்டம்பரில் தஞ்சையின் மீது படையெடுத்தான் வல்லம் கோட்டையைக் கைப்பற்றினான். வெற்றி வீரனான உமாதுல் உமாராவோ, செப்டம்பர் 28-ஆம் தேதி தஞ்சை அரசனோடு ஒப்பந்தம் செய்து கொண்டான். அதன்படி இலட்சக்கணக்கான ரூபாய்களைத் தஞ்சை வேந்தன் தர வேண்டுமென்றும், இராமநாதபுரம் சிவகங்கைச் சீமையிலிருந்து கைப்பற்றப்பட்ட பகுதிகள் திருப்பி அந்தந்த நாட்டிற்கே ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் ஏற்பாடாயிற்று. தஞ்சாவூர் வேட்டை முடிந்ததும் நவாபு இராமநாதபுரம் சிவகங்கைச் சீமையை விழுங்கத்திட்டமிட்டான். தஞ்சையை வெற்றி கொண்ட மறுநாளே நவாபுவின் மகன் உமாதுல்-உமாராவே தன் தந்தைக்குக் கடிதம் தீட்டினான். அதில் இராமநாதபுரம் சிவகங்கைச் சீமையர்கள் அடக்கலாகா மறவர் மக்களாய் இருக்கிறார்கள் என்றும், தஞ்சையைச் சூறையாடிய போது ஆர்க்காட்டுச் சேனைக்குத் துணையாக அவர்கள் ஒரு சிறிதும் படை உதவியோ பொருள் உதவியோ புரியவில்லை என்றும், மறவர் மக்கட்குத் தஞ்சையிலிருந்து தங்கட் குரிய பகுதிகளைக் கவர்ந்து கொள்வதிலேதான் குறி என்றும், எனவே, இத்தகையோரை முறியடிக்கத் தஞ்சையை வென்ற பட்டாளத்தையே தாமதம் இன்றிப் பயன்படுத்த வேண்டும் என்றும் எழுதினான். 1772 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் நவாபு கும்பெனி அரசாங்கத்துக்கு ஒலை அனுப்பினான். அதில் இராமநாதபுரத்தை ஆள்வோர் டச்சுக்காரர்கட்குத் தன்அனுமதியின்றிக் கோட்டை கட்டிக் கொத்தளங்கள் அமைத்துப் போர்த்தளவாடங்களைப் பெருக்கக் கடற்கரை நகரங்களை உரிமையாக்கிவிட்டனர் என்றும், இராமநாதபுரம் சிவகங்கைச் சீமைத் தளபதிகள் போருக்குரிய ஏற்பாடுகளை எல்லாம் விரைந்து செய்கின்றார்கள் என்றும், தனக்குக் கட்ட வேண்டிய கப்பத்தை ஒழுங்காகக் கட்டவில்லை என்றும், தம் காடுகளில் கொடிய கள்வர் கூட்டங்கட்கு எல்லாம் அடைக்கலம் அளித்துள்ளனர் என்றும், இன்னும் எவ்வளவோ