பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவகங்கைச் சீமையில் திரட்டி வந்த செய்திகள் பலவற்றிற்கும் அரண் புரியவல்ல வரலாற்று ஆதாரங்களை நாடினேன் தேடினேன். சென்னைப் பல்கலைக் கழக நூல் நிலையமும் எழும்பூரில் உள்ள ஆவணக்களஞ்சியமும் (Records office) எனக்குப் பேருதவி புரிந்தன. ஏற்கெனவே யான் கர்னல் வெல்ஷ், பிஷப் கால்டு வெல் முதலியோர் நூல்களைக் கற்றிருந்தது வாயிலாக அறிந்திருந்த உண்மைகளையும் றிப்பிட்டவாறு பல்வகையாலும் முயன்று சேர்த்த சான்றுகளையும் உழைத்த உழைப்பின் பயனாக வெளிவரும் இவ்வாராய்ச்சி நூலைத் தமிழ் அன்னையின் திருவடிகளில், தமிழ் மக்களின் தேசியத் திருநாளாகிய இப்பொங்கற் பெருநாள் காணிக்கையாக உரிமையாக்குவதில் வரம்பில்லா மகிழ்வு அடைகிறேன்! தமிழகத்தின் வரலாற்றை முதன் முதலாகத் தமிழில் வரைந்து வெளியிட்டது வாயிலாகத் தமிழ் கூறும் நல்லுகத்தின் வாழ்த்திற்கும் வணக்கத்திற்கும் உரியவராய் விளங்கும் அறிஞரும் சென்னைப் பல்கலைக்கழக இந்திய வரலாற்றுத் துறையின் சிறப்பு விரிவுரையாளருமாகிய பேராசிரியர் டாக்டர், மு. ஆரோக்கியசாமி அவர்கள், பான் எழுதிய இந்நூலுக்கு அழகியதோர் அணிந்துரை அளித்து வாழ்த்தியுள்ளார்கள். அவர்கள் பேரன்பிற்கு என் உளங்கனிந்த நன்றி உரியது. 'மருதிருவர் நூலின் கையெழுத்துப் படியைப் பார்த்துத் தக்க திருத்தங்கள் செய்துதவிய மகாவித்துவான் உயர்திரு. மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை அவர்கட்கு என் பணிவார்ந்த வணக்கங்களை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும், இந்நூல் உருவாவதற்கு வேண்டும் உதவிகள் புரிந்த பெருமக்களைப் பற்றிய குறிப்புகளை நூலினுள் உரிய இடங்களில் பொறித்துள்ளேன். வீரத் தமிழ் நாட்டின் மறைந்த வரலாறுகளை வெளிப்படுத்த யான் பணிவுடன் மேற்கொண்டுள்ள முயற்சிகளில் வெற்றி பெறப் பல்வகையானும் என்னை ஆதரித்து வரும் தமிழ் மக்கட்கும், அவர்கட்கும் எனக்கும் உள்ள இதயங்கலந்த உறவை நாளும் வளர்த்துவரும் பாரி நிலையத்தார்க்கும் என் நன்றி கலந்த வணக்கங்கள் உரியனவாகுக! வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரத மணித்திருநாடு! மன்மத தைக்க ந. சஞ்சீவி (1956)