பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 பேராசிரியர் ந.சஞ்சீவி பலவாகும். அவற்றுள் இன்றும் சிறப்புடன் விளங்குவன பொன்னாத்தாள் குளமும் உடையார் சேர்வை ஊருணியும் ஆகும். 'அன்னையும் பிதாவும் முன் அறிதெய்வம் எனக்கருதிய மருதிருவர் தம் தாயார் பெயராலும் தந்தையார் பெயராலும் முறையே உண்டு பண்ணியவைகளே இவை. வீரவணக்கம்: எவர்க்கும் வணங்காத மருதரசர் முடி, மாசற்ற வீரத்திற்கு மட்டும் தலை வணங்கும். உண்மையான வீரர்களைக் கண்டால், அவர் உள்ளம் உவகையால் பொங்கும். இவ்வுண்மையை விளக்கவல்ல பல கதைகள் செவிவழிச்செய்திகளாய் வழங்கி வருகின்றன. அவற்றுள் ஒன்றை இங்குக் காண்போம். நைனப்பரது நெஞ்சுரம் நைனப்பன் சேர்வை என்பவர் மருதரசர் படையின் தளபதியாய்த் திகழ்ந்தனர். ஒரு சமயம் அவர் உடல் வலிமையையும் உள்ளத்திண்மையையும் சோதிக்க விரும்பினார் பெரிய மருது. கடியா வயல் என்னுமிடம் சிவகங்கையிலிருந்து சுமார் 56 கி.மீ. தொலைவில் இருக்கிறது. இக்கடியா வயலுக்குச் சிவகங்கையிலிருந்து தம் குதிரைமேல் போய் மீள விரும்புவதாகவும் தம்மோடேயே நைனப்பன் சேர்வையும் ஓடி வந்து திரும்ப வேண்டும் என்றும், எங்கும் தங்கக் கூடாதென்றும் கூறினார் மருதரசர். சரி என்று நைனப்பன் சேர்வையும் ஒத்துக் கொண்டார். சோதனை நாள் வந்தது. மருதரசர் விருப்பப்படி இரண்டு பர்லாங்குத் தூரம் முன்னாலேயே புறப்பட்டார் நைனப்பர். மருதரசரும் பின் தொடர்ந்தார். குதிரை காற்றாய்ப் பறந்தது. அதன் கடிவாளத்தை இறுகப் பற்றிக் கொண்டார் நைனப்பர். குதிரையும் நைனப்பரும் சளைக்காமல் போட்டியிட்டுக் கொண்டு ஓடுகையில் வழியில் கூரிய பெரிய உடைமுள் ஒன்று சேர்வைக்காரரின் காலில் சுரீர் என்று பாய்ந்தது. அதை ஆர அமர எடுக்க முனைந்தால் குதிரை பறந்து விடுமே என்று நினைத்த நைனப்பர் ஒரு கடுமையான காரியத்தைச் செய்தார். தம் இடக்கையால் இடுப்பில் செருகியிருந்த வளரியை எடுத்து ஒரு தட்டுத் தட்டினார். பலகைக்குள் ஆணி பாய்ந்தது போல் பாதத்திற்குள் உடைமுள் ஒடி ஒளிந்து கொண்டது.போட்டி முடிந்தது. நைனப்பர் வெற்றி பெற்றார். அரசர் அடைந்த அகமகிழ்விற்கு எல்லையில்லை; நைனப்பருக்கு மாலை சூட்டினார், மணி ஆரம் பூட்டினார். இன்னொருநாள் வேட்டைக்குச் சென்ற மருதரசரோடு சென்றார் நைனப்பர். எதிர் பாராத வகையில் புதரிலிருந்து புலியொன்று நைனப்பன் சேர்வை மீது பாய்ந்தது. பயந்தாரில்லை மருதுவின் தளபதி, புலியோடு பொருது அதன் வாயைப் பிளந்து ஆப்பசைப்பது போல அதன் பல்லை அசைத்துப் பிடுங்கி மருதரசர் காலடியில் காணிக்கையாக்கினார். அரசர் அடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை. ஆனால், புலியோடு போராடி நைனப்பர் அடைந்த காயங்கள் நாள் பல ஆகியும் ஆறவில்லை. மருந்துகள் பல இட்டும் குணம் பெறவில்லை. புரையோடிப் போயிற்று காப்பாற்றும்