பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 பேராசிரியர் ந.சஞ்சீவி குடும்பக்கவலை காரணமாகத் தம் சொந்த ஊராகிய கோசுகொண்டுவை விட்டுப் புறப்பட்டு வந்தனர் கணவனும் மனைவியுமாகிய இருவர் பற்பல இன்னல்களையும் கண்டு கடந்து, இறுதியாகச் சிவகங்கைச் சீமையிலுள்ள நரிக்குடிச் சத்திரத்தில் வந்து நள்ளிரவில் தங்கினர். சிறு நாய் ஒன்றே துணையாகத் தன்னந்தனியே வந்து தங்கிய அவர்களைச் சில கயவர்களின் பருந்து விழிகள் ஆராய்ந்தன. அவன் நல்லவன்; அவள் அழகி, என அறிந்தார்கள். நச்சு மூளை வேலை செய்தது. மறுநாள் அந்திப் பொழுது காரிருள் சூழும் வேளை, கயவர் சிலர் வந்து அவனை நய மொழிகள் கூறி எங்கோ அழைத்துச் சென்றனர். அவனோடு அக்குடும்பத்திற்குத் துணையாய் இருந்த நாயும் சென்றது. எங்கும் இருள் சூழ்ந்தது. போனவன் திரும்பவில்லை. அவள் இதயம் படபடத்தது. சிறிது நேரத்தில் நாய் மட்டும் நடுங்கிக் கொண்டே திரும்பி வந்தது. அவள் உடலெல்லாம் துடித்தது. நாய் அவள் சேலையைக் கெளவி எங்கோ இழுத்தது. அவள் அதன் பின்னேயே ஓடினாள். நரிக்குடிக்கு அருகிலுள்ள வெட்டிநாடான் ஊருணிக்குள் நுழைந்தது அந்நாய். அவளும் உள்ளே பாய்ந்தாள் - பார்த்தாள். அந்தோ அவள் கணவன் - பிண்ம்! ஊருணியில் பதறினாள்; அலறினாள்; மருது இருக்கும் திக்கு நோக்கி ஓடினாள் அவர் முன்னே வீழ்ந்தாள் முறையிட்டாள். செய்தியறிந்த மருது சகோதரர்கள், நம் ஆட்சியிலா இந்த அநீதி' என்று கொதித்துக் கொண்டே குதிரை ஏறினார்கள்; நாய் வழி காட்டியது: குதிரைகள் விரைந்தன; பத்தினியும் பின் தொடர்ந்தாள்: நரிக்குடிக்குச் சென்று சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்த்துச் சகோதரர்கள் உண்மையை அறிந்தார்கள். யார் அந்தக் கயவன்? என்று உரக்கக் கூவினார் பெரிய மருது இடி போன்ற குரலில், அம்பு போலப் பாய்ந்தது நாய். அது தன் பற்களால் ஒரு மனித மிருகத்தினைப் பற்றி இழுத்து வந்தது. அனைவர் உடம்பும் மயிர்க் கூச்செறிந்தன. 'உம்' என்றார் பெரிய மருது. காவலாளிகள் கயவனைக் கண்ணிமைக்கும் நேரத்தில் எங்கோ கொண்டு சென்றார்கள். பெரிய மருது பத்தினியைப் பார்த்துப் பணிவுடன் பேசினார்; அம்மா, என்னை மன்னியுங்கள் கவலை வேண்டா, அந்தப் பாவி அகப்பட்டுவிட்டான். இந்நேரம் அவன் உயிர் பிரிந்து சென்ற உம் கணவரிடம் போய் மன்னிப்புக்கு மன்றாடிக் கொண்டிருக்கும். எனவே, நீர் கவலையுறாதீர்; கலங்காதீர். உம்மை என் தாயாராகக் கருதிக் காப்பாற்றுகிறேன். என்றார். பத்தினி கைகூப்பிக் கண்களில் நீரொழுகப் பதிலுரைத்தாள் அரசரே, எனக்கு எதுவும் வேண்டா. என்னை என் கணவரிடமே சேர்த்து விடுங்கள். சந்தனக் கட்டையை அடுக்குங்கள் என் நாயகரின் பொன்னுடலை அதிற்கிடத்துங்கள் தீ மூட்டுங்கள். நானும் அவரும் ஒன்றாகிவிடுகிறோம். அரசரே, பத்தினியின் சொல்லைத் தட்டவேண்டா. என் கற்பு மாசற்றதானால், என் உடல் தான் வேகும். நான் அணிந்துள்ள பட்டாடையும் காதோலையும்