பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 136 நிருவாகத்திற்கும் ஆர்க்காட்டு நவாபுவிற்கும் இடையே நிலவியிருந்த உறவு பற்றி அறிந்து கொள்வது அவசியம். 1781லே தான் திருநெல்வேலியில் ஒருவாறு ஆங்கிலேயரின் நிருவாகத் தொடர்பு நேரடியாய்த் தொடங்கியது. எனினும், 1799லிருந்த லூவிங்டனுடைய நிருவாகம் வரை நாட்டில் நிலவியிருந்த குழப்பம் ஒழியவுமில்லை; ஒடுங்கவுமில்லை. இத்தகைய செயலற்ற தன்மைக்கு முக்கியமான ஒரு காரணம், ஐதர் அலி, திப்புச் சுல்தான் போன்ற ஆங்கில ஏகாதிபத்தியத்தின் கொடிய எதிரிகளின் கடுமையான படையெடுப்புகளிலிருந்து நாட்டைப் பாதுகாக்கத் திருச்சிராப்பள்ளிக்கு வடக்கேயும் மைசூருக்கு அருகேயும் படைகளைச் சேகரித்து வைக்க வேண்டியது அவசியமாயிருந்தமையே. ஆனால், பூரீரங்கப்பட்டணம் பிடிபட்டதாலும் 1799-ஆம் ஆண்டு. மே மாதம் 4-ஆம் தேதி திப்பு இறந்ததாலும் இந்தத் தொல்லைக்கு ஒரு முடிவு ஏற்பட்டது. அந்தக்காலம் முழுவதும் ஆங்கில நிருவாகத்திற்கும் நவாபுவிற்கும் இடையே இருந்த நல்லுறவற்ற நிலையே திருநெல்வேலிப் பாளையக்காரர்களை அடக்குவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு மற்றொரு முக்கியமான காரணம். 1781 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி ஆங்கிலேயருக்கும் நவாபுவுக்கும் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்படி போர்க்காலங்களில் கர்நாடகம், அதைச் சேர்ந்த திருநெல்வேலிப் பகுதி முதலிய இடங்களிலிருந்து வரும் வருமானத்தை வசூலிப்பதற்கான உரிமையை ஆங்கிலேயரிடம் விட்டுவிட வேண்டுமென்றும் சொந்தச் செலவிற்காக நவாபுவுக்கு ஆறில் ஒரு பங்கைக் கொடுத்துவிட வேண்டுமென்றும் ஏற்பாடாயிற்று. 1787 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி மற்றோர் உடன்படிக்கை ஏற்பட்டது. இந்த ஒப்பந்தம் வாயிலாக முக்கியமாக வரிவசூலிப்பதற்கும், பாதுகாவலுக்கும், நாட்டில் ஒழுங்கை நிலை நாட்டுவதற்கும், நிருவாகத்தையும் அதிகாரத்தையும் இடையூறின்றி நடத்துவதற்கும் தேவையான பொழுது நவாபுவுக்குக் கம்பெனி படைகளைக் கொடுத்து உதவ வேண்டுமென்பது முடிவாகியது. ஆனால், இந்த ஏற்பாட்டின் படி தன் அதிகாரம் பின்னப்பட்டுவிடும் என்றும் நாட்டில் ஒழுங்கை நிலை நிறுத்தும் முயற்சிக்கு ஊரு நேருமென்றும் கருதி, இம்முடிவை ஆங்கில அரசாங்கம் விரும்பவில்லை. கர்நாடகத்தில் வரி வசூலிக்கவும் செலவுகளை மேற்பார்வையிடவும் நவாபுவுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகள் பயனற்றுப் போனதால், சென்னை அரசாங்கம் எவ்வித உடன்படிக்கையுமின்றி ஒர் அறிக்கையின் மூலம் 1790 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 7 ஆம் தேதி நாட்டின் நிருவாகத்தைத் தனது நேரடிக் கண்காணிப்பிற்குக் கொண்டுவந்தது.