பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149 பேராசிரியர் ந.சஞ்சீவி ஆகஸ்டு மாதம் 2 ஆம் தேதி மேஜர் ஜேம்ஸ் கிரகாம் தலைமையில் பாதை அமைக்கச் சென்ற பட்டாளத்தைத் தாக்கியது மருதுவின் படை மலாய் வீரர்கள் மருண்டு வந்து வெள்ளையர் மத்தியில் விழுந்தார்கள். அவர்களுள் இருவர் விடுதலை வீரர்களின் துப்பாக்கிக்கு இரையாயினர். இந்த ஒரு நாளில் மட்டும் வெள்ளைப் பட்டாளம் பாதை போட எடுத்துக் கொண்ட முயற்சி அறுநூறு கெஜத் துரத்திற்குமேல் பலிக்கவில்லை. இந்தச் சிறு முயற்சியை முடிப்பதற்குள்ளேயே பறங்கிப் பட்டாளம் பலரை இழக்க நேர்ந்தது; மருதிருவர் படையால் சொல்லொணாத் துன்பங்கட்கு இரையாகியது. ஆகஸ்டு மாதம் 3 ஆம் தேதி மீண்டும் காட்டை அழிக்கக் கர்னல் டார்லிம்பில் தலைமையில் புறப்பட்ட பட்டாளம், நாள் முழுதும் சிவகங்கை வீரர்களோடு போராட வேண்டியிருந்தது. நானூற்று முப்பது கெஜத் தூரத்திற்கு மேல் முன்னேற முடியவில்லை. இந்த ஆகஸ்டு மாதம் 3 ஆம் தேதியில் அவமானத்திற்குரிய ஒரு முக்கிய நிகழ்ச்சி நடந்தது. பின்னாளில் பிரிட்டிஷாரால் சிவகங்கையின் அரசன் என முடி சூட்டப்பட்ட உடையத் தேவனின் மாமன், வெள்ளையர் முகாமுக்கு, உண்டவர் வீட்டுக்குத் துரோகம் செய்ய வந்தான். மருதுவின் படையில் நம்பிக்கைக்கு உரிய ஓர் இடத்தில் இருந்தவன் அவன். காசாசையால் மானமிழந்து வந்த அப்பாவி, மருதுவின் போர் முறைகள் - திட்டங்கள் பற்றிய பல முக்கியச் செய்திகளைக் கர்னல் அக்கினியூவுக்குத் தெரிவித்தான். ஆகஸ்டு மாதம் 4 ஆம் தேதி நடந்த போராட்டத்தில் நான்கு ஐரோப்பியரும் ஒன்பது சுதேசிகளும் உயிரிழந்தார்கள். வெள்ளையர் கணக்குப்படி மருதுவின் படையிலும் பலர் உயிர் இழந்தனர். 580 கெஜம் முன்னேறவும் ஐரோப்பியப் படையால் இயலவில்லை. மருதுவால் தற்காப்புக்காகக் கட்டப்பட்ட ஒரு சிறு அரண் தகர்க்கப்பட்டது. ஆகஸ்டு மாதம் 5 ஆம் தேதி வெள்ளைப் படையால் நானுற்று நாற்பது கெஜத்துரம் முன்னேற முடிந்தது. மருதுவின் படை வன்மை அதிகரித்தது; காளையார் கோவில் காடும் வரவர அடர்த்தி நிறைந்ததாய் இருந்தது. ஆகஸ்டு மாதம் 6 ஆம் தேதி மேஜர் கிரகாம் தலைமையில் இருந்த வெள்ளையர் படைக்கும் சுதந்தர வீரர்களின் படைக்கும் இடையே பலத்த போர் நிகழ்ந்தது. காளையார் கோவில் காட்டில் எண்டிசையிலும் இரத்தக்கறைகள் தென்பட்டன. வெள்ளைப் பட்டாளத்திற்கு நேர்ந்த இழவு பெரியது. ஆயினும், மருதுவின் படையை ஒருவாறு வெற்றி கொண்டு ஆங்கிலப்படை அன்றைய தினத்தில் 237 கெஜத் தூரம் காட்டில் வழி கண்டது.