பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. புரட்சியின் தாயகம்

'செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே.'

ஆம். தொல்காப்பியம் தோன்றிய காலந்தொட்டுப் பாரதியார் கவிதை பிறந்த தலைமுறை வரை ஒவ்வொரு நூற்றாண்டிலும் வாழையடி வாழையாகக் கணக்கற்ற புரட்சிப் பெருவீரர்கள் தமிழ் மண்ணில் தோன்றினார்கள். அவர்கள் ஏட்டிலும், நாட்டிலும், கவிதையிலும், கற்பனையிலும், சமயத்திலும், சாத்திரங்களிலும், ஆலயங்களிலும், அறப்பணிகளிலும், சிந்தனைக் கோட்டையிலும், செயல் உலகிலும் செய்த இணையில்லாப் பெரும்புரட்சிகள் யாவற்றையும் சொல்லால் அளவிட்டு உரைத்தல் யாரால் ஆகும் வாழப் பிறந்த தமிழினம், எங்கெல்லாம் மனித அறிவும் உணர்வும் செல்லுமோ, அங்கெல்லாம் மாறுதல்களைக் கண்டு, புரட்சிகளைச் செய்து முன்னேறுவதையே தன் வாழ்வின் மூச்சாகக் கொண்டு விளங்கியது. ‘நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்,’ என்று இருந்த முடியாட்சியிலும், ‘கொடியன் எம் இறை எனக் கண்ணின் பரப்பிக் குடி பழி தூற்றும்’ கொடுங்கோலன் ஆகும் கொடுமைக்கு அஞ்சிய காவலரை - போர் போர் என்று தினவெடுத்துத் திரிந்த தமிழ் மறவர் வாழ்ந்த மண்ணிலே பிறந்தும், போர் முரசின் ஒலியன்றி வேறு ஒலி கேளாத காலத்தில் வாழ்ந்தும், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று ஒற்றுமைச் சங்கு ஊதி, ‘உலகம் ஒன்றே அதில் உறையும் மாந்தர் அனைவரும் ஒரு குடியே,’ என்று அனைத்துலக முரசு கொட்டிய செந்தமிழ்ச் சான்றோரை சங்ககாலத் தமிழகத்திலன்றி வேறு எங்கே சந்திக்க இயலும்? ‘கள்ளும் கற்பில் மங்கையர் உறவும் நாகரிகம்’ எனக் கருதி மக்கள் மயங்கிய நாளில், பிறப்பு வழிப்பெருமை பேசும் பேதைமை புகுந்த காலத்தில் அவற்றை எதிர்த்து, ஏடும் எழுத்தாணியுமே கொண்டு, கருத்துலகில் புரட்சி செய்து, சாதி சமய பேதம் கடந்த நீதி நூலை, உலகப் பொது மறையை, காலத்தை வென்ற கவிதையைப் பாடித் தந்த திருவள்ளுவரைத் தமிழ் மண்ணில் அன்றி வேறு எங்கே காண இயலும்? பழியறியாப் பாண்டி