பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. மூன்று நிகழ்ச்சிகள் மருது பாண்டியர் புகழை விளக்கவல்ல எத்தனையோ கர்ண பரம்பரைக் கதைகளும் கிராமியக் கவிதைகளும் நாட்டில் நடமாடி வருகின்றன. அவற்றையெல்லாம் வெறுங்கட்டுக்கதைகள்' என்று ஒதுக்கிவிடல் அறிவுடைமையாகாது. எத்தனையோ ஆண்டுகளாக மக்கள் வழிவழியாகக் கூறிவரும் அவ்வாய்மொழிச் செய்திகளில் இயற்கை இறந்த நிகழ்ச்சிகளும் அவ்வளவாக இல்லை. எனவே, அவற்றை வரலாற்றுக் கண் கொண்டு பார்த்து மகிழல் பயன் தருவதாகும். நாட்டின் நிருவாகத்திலும் மக்களின் நல்வாழ்விலும் பெருநாட்டம் கொண்டிருந்த மருதரசர், தம் கடைசிக் காலத்தை எவ்வளவு கடுமையான போரில் கழிக்க வேண்டியிருந்தது என்பதை விரிவாகப் பார்த்தோம். அவ்வளவு கடுமையான போரில் ஈடுபட்டிருந்த நாளிலும் அவர்கள் 'நாட்டின் நிருவாகத்தில் பெருங்கவலை கொண்டிருந்தார்களாம்; கடமையை ஒழுங்காகச் செய்தார்களாம். இவ்வுண்மையை விளக்குவனவாக அமைந்துள்ள மூன்று கதைகளை ஈண்டுக் காண்போம். 1. திருடன் திருந்தினான்: எவ்வளவு நல்லாட்சியிலும் கள்வர் சிலரும் கயவர் சிலரும் இருப்பதைத் தவிர்க்க முடியாது. ஒரு சமயம் உதய பெருமாள் கவண்டன் என்ற பெரிய திருடன் ஒருவன் தன் கைவரிசைகளால் மக்களைப் பெரிதும் அச்சுறுத்தியும் மருது பாண்டியர் கவனத்தை ஈர்த்தும் வந்தான். போர் கடுமையாய் நடந்து கொண்டிருந்த காலமாதலால், மருதரசர், சரி, அவனைச் சற்றே பொறுத்துக் கவனித்துக் கொள்வோம்,' என்று இருந்தார். போர் இடைவிடாது நடந்து கொண்டிருந்தது. திடீரென்று போர் முனையில் இருந்த அவருக்கு வைகையில் பெருவெள்ளம்; அதனால் திருப்பாச்சேத்திக்கு நான்காவது மைலில் உள்ள மாறை நாட்டுக் கண்மாய் உடைப்புக் கண்டுவிட்டது. கிராமங்கள் பாழாகிவிடும் போலிருக்கின்றது, என்ற செய்தி வந்தது. செய்தி கிடைத்ததும் மருதரசர் குதிரையேறிப் புறப்பட்டார்; உடைப்பெடுத்தோடும் கண்மாய்க் கரையில் விரைந்து சென்று நின்றார்; வெள்ளம் கரையை உடைத்துக் கொண்டு ஓடுவதைக் கண்டார். அணை கோலி வெள்ளத்தைத் தடுக்க ஆண்களும் பெண்களும் துடியாய் இருப்பதைக் கண்ட அரசர் உள்ளம் அடைந்த பூரிப்புப் பெரிது. தம்