பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 பேராசிரியர் ந.சஞ்சீவி வீரபாண்டியன் தம்பி ஊமைத்துரையே தமிழர் படைக்குத் தலைமை தாங்கினான். அந்த வீரத் தலைவன் வாளுக்கு அன்று கிடைத்த விருந்து பெருவிருந்தே 'இராமலிங்க விலாச நிகழ்ச்சி கம்பெனி அதிகாரிகட்குத் குலை நடுக்கம் தந்தது. பிற நாட்டு மக்களைச் சூறையாட வந்தவர்கள் எனினும், தங்கள் நாட்டவர் இரத்தம் சிறிதும் சிந்தச் சகியாத பண்பு படைத்தவர்களன்றோ வெள்ளைத் துரைமார்கள் எனவே, வீரபாண்டியன் ஜாக்ஸன் சச்சரவு பற்றித் தீர விசாரித்தார்கள். இந்த விசாரணையில் வீரபாண்டியன் தூத்துக்குடியிலிருந்து தன் வெள்ளை நண்பன் டேவிட்சனை, நிகழ்ந்த நிகழ்ச்சி பற்றிய உண்மைகளை எல்லாம் நடுவு நிலைமையோடு விளக்கி எழுதச் செய்திருந்த கடிதம் பெரிதும் பயன்பட்டது. அதன் விளைவாகக் கம்பெனி அதிகாரிகள். ஜாக்ஸன் வீரபாண்டியனிடம் நடந்து கொண்ட முறை அநியாயமானது, தேவையற்றது; நம் நோக்கத்திற்கே தீமை பயப்பது, என்று தீர்ப்பளித்தார்கள். அதோடு அவனைக் கலெக்டர் பதவியினின்றும் உடனே நீக்கி, அப்பதவிக்கு லூவிங்டன் என்பவனை நியமித்தார்கள். அதோடு இராமலிங்க விலாச நிகழ்ச்சியில் கைது செய்யப்பட்ட பாஞ்சைப்பதியின் தலைமை நிருவாகி தானாபதிப் பிள்ளையையும் விடுதலை செய்தார்கள். கம்பெனி நிருவாகம் கலெக்டரை மாற்றியது; ஆனால், தன் கருத்தை ஒரு சிறிதும் மாற்றிக் கொள்ளவில்லை. புதிய கலெக்டர்லூவிங்டன்தன் அறிவிற்கும் கற்பனைக்கும் எட்டிய எல்லா வழிகளையும் ஒன்று விடாமல் பயன்படுத்திக் கட்டபொம்மனைத் தன் கருத்திற்கு இணங்க வைக்கப் பார்த்தான். ஆனால், தான் செய்த முயற்சிகள் அனைத்தும் வீரபாண்டியனது நெஞ்சுறுதியால் பாழாய்ப் போனதை அறிந்து பகைத்தான், கம்பெனி மேலதிகாரிகளுக்குக் கடுமையான கடிதம் எழுதினான்; அதில் வீரபாண்டியனைப் படைப்பலத்தால் அழிப்பது ஒன்றே அமைதிக்குவழி என்பதையும் குறிப்பிட்டிருந்தான்.அப்போது சென்னையில் கவர்னராய் இருந்தவன், இந்தியாவை அடிமைப்படுத்திய லார்டு கிளைவின் மகன் எட்டுவர்டு கிளைவ் என்பான். அவன் தன் அதிகாரிகளை அழைத்து. ஆழ்ந்த ஆலோசனை நடத்தினான். அதன் பயனாகப் பாஞ்சைப் பதியானைத் தாக்க மேஜர் பானர்மன் என்பவன் போர் நிகழ்த்துவது உட்பட எல்லா அதிகாரங்களும் படைத்தவனாக, திருநெல்வேலிச் சீமையின் சர்வாதிகாரியாக நியமிக்கப்பட்டான். அவ்வாறு அவன் சர்வாதிகாரம் பெற்றுப் படையெடுக்கப் போகும் செய்தி திருநெல்வேலிச் சீமை முழுதும் பறையறைவிக்கப்பட்டது. ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வயிறு வளர்க்க வந்த கூட்டம், தமிழகத்தின் மீது படையெடுக்கத் தமிழகத்திலேயே தண்டோரப் போட்டது. என்ன கொடுமை!