பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 பேராசிரியர் ந.சஞ்சீவி இடிபோல முழங்கி, எதிரிகள் அணி வகுப்பைச் சிதைத்து, உள்ளே புகுந்து, தம் வஞ்சம் தீர, பானர்மன் நெஞ்சம் பதைபதைக்க, வெள்ளைப் படைகளை வெட்டித் தள்ளினர். பாஞ்சை வீரரது அடக்கலாகாச் சினத்தைக் கண்ட பானர்மன், மேலும் மேலும் தன் பீரங்கிப் படைகளை முடுக்கி விட்டான். இதையறிந்த வீரபாண்டியன் படை வீரர் வெறி கொண்டு கம்பெனிப் படையைத் தாக்கினர். இந்நிலையில் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையின் ஒரு புறத்தில் பிளவு கண்டது. மகிழ்ச்சியால் ஆர்த்தது கம்பெனிப்படை ஆனால், வீர மறவர் நெஞ்சமோ, துடிதுடித்தது. கோட்டை பிளவு கண்டது அறிந்த காலன் என்னும் ஆங்கிலத் தளகர்த்தன், பரிமீதேறி அவ்வழிப் பாய்ந்தான். அவ்வாறு அவன் அம்பு போல விரைந்து வருவதைக் கூர்ந்து கவனித்தான் வெள்ளைத் தேவன் என்னும் மறக்குல மாவீரன். கோட்டையின் பிளவைக் காலன் நெருங்கியதும் வெள்ளைத்தேவன் தன் கைவேலைக் குறிபார்த்து ஏகாதிபத்திய வெறியனது இதயத்தில் பாய்ச்சினான். தமிழ் வீரன் பாய்ச்சிய வேல், காலன் உடலில் ஊடுருவிப் பாய்ந்து, வெளி வந்து வெற்றிச் சிரிப்புச் சிரித்தது. அங்கேயே அக்கணமே பலியானன் காலன். அவனைத் தொடர்ந்து வந்த தளகர்த்தர் எழுவரும் கல்லாலும், வில்லாலும், வேலாலும், வாளாலும் தாக்குண்டு, காலன் சென்ற உலகிற்கே கடுகிச் சென்றனர். தளகர்த்தர்கள் தலைகளெல்லாம் தரையில் உருளுவது கண்ட கம்பெனிப் பட்டாளம் கதி கலங்கிச் சிதறி ஒடியது. படைகளெல்லாம் சிதறி ஓடும் நிலை கண்ட பானர்மன், தன் கடுஞ்சினத்தாலும் கட்டளையாலும் கம்பெனிப் படைகளைத் திரட்டி, மீண்டும் போரிடச் செய்தான். இருதிறப் படைகளும் கடும்போர் புரிந்தன. இரத்தவெள்ளம் ஆறாய்ப் பெருகியது. கட்டபொம்மனும் ஊமைத்துரையும் வீர கர்ச்சனை புரிந்தனர். அது கேட்ட தமிழ் வீரர், உயிரைத் துரும்பென மதித்துக் கம்பெனிப் படைகளைச் சின்னபின்னமாகும்படி வேல், கம்பு, விளரித்தண்டு, குத்தீட்டி, சுருள்வாள் ஆகியன கொண்டு தாக்கிப் புடைத்தனர். பானர்மன் படைகள் இருக்குமிடம் தெரியாமல் மறைந்தன. 'ஒழிந்தது வெள்ளைப்படை' என்று தோள் கொட்டித்துள்ளினர் வீர மறவர். ஆனால், வீரபாண்டியன் மனத்திலோ, மகிழ்ச்சி இல்லை. பானர்மன் திட்டப்படி புதிய படைகள் வந்து சேரின் நிலைமை என்னவாகும்' என அவன் கலங்கினான். 'குறைந்த படையுடன் கோட்டைக்குள்ளேயே இருந்து கனல் வாய்ப் பீரங்கிகட்கு இரையாகிச் சாவதைவிடப் பாஞ்சைப் பதியை விட்டு வெளியேறிக் கிழக்கிந்தியக் கம்பெனியை வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் ஒழிக்கத் தமிழகம் முழுவதையும் தட்டி எழுப்பிப் படைதிரட்ட வேண்டும்' என்று கருதினான்; உடனே தன் அருமைத் தம்பியரும் அமைச்சர் முதலியோரும் சூழ, நள்ளிரவில் கோட்டையை விட்டு வெளியேறினான்.