பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. ஊமைத்துரையின் உரிமைப்போர்: 1799 ஆம் ஆண்டு, அக்டோபர் திங்கள் 16 ஆம் நாள் வீரபாண்டியன் தூக்கிலிடப்பட்டான். கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எமன் போன்றிருந்த கட்டபொம்மனைத் துக்கிலிட்டுக் கொன்றுவிட்டோம் என்ற மகிழ்ச்சி வெள்ளை அதிகார வர்க்கத்திற்கு இல்லாமலில்லை. ஆயினும், அவர்கள் எச்சரிக்கையாகவே இருக்க விரும்பினார்கள். அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார்கள். வீரபாண்டியனைக் கொன்ற ஏழே நாள்களில் திருநெல்வேலிச் சீமையில் பாஞ்சாலங்குறிச்சி உட்பட 42 கோட்டைகளை இடித்துத் தள்ளினார்கள், பாஞ்சாலங்குறிச்சியையும் அதற்குத் துணையாய் நின்ற பிற பாளையங்களையும் கம்பெனியின் நேரடி நிருவாகத்திற்கு இரையாக்கினார்கள்; எஞ்சியிருந்த பிற பாளையங்களையும் வெறுஞ்சமீன்களாகத் தாழ்த்தினார்கள்: எக்காரணத்தை முன்னிட்டும் எவரும் ஆயுதம் தயாரித்தாலோ, அல்லது வைத்திருந்தாலோ, மரண தண்டனை கிட்டுமெனப் பறையறைந்து அறிவித்தார்கள். இந்த அநீதிகளை எல்லாம் கண்ட தமிழ் மக்கள் மனம், எரிமலை போலக் கொதித்தது. வீரபாண்டியன் கொல்லப்பட்டதையும், ஊமைத்துரை முதலான தம் அருமைத் தலைவர்கள் சிறையில் அடைபட்டுக் கிடப்பதையும் நினைந்து நினைந்து, உள்ளங் குமுறிய ஆயிரக்கணக்கான இளமறவர் ஒட்டநத்தம் என்னும் சிற்றுரில் நள்ளிரவு நேரங்களில் கூடிப் பலாத்காரப் புரட்சிக்கான திட்டங்களைத் திறம்பட வகுத்தார்கள்; அதன் வழிச் செயலாற்றவும் துணிந்தார்கள். 1801 ஆம் ஆண்டு, பிப்ரவரித் திங்கள், 2 ஆம் நாள் பாளையங்கோட்டைச் சிறைச்சாலையைச் சுற்றிலும் ஆயிரத்திற்கு மேற்பட்ட 'மர்ம மனிதர்கள் நடமாடிய வண்ணமிருந்தார்கள். அவர்கள் அனைவரும் அந்திப் பொழுதை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள். கதிரவன் மறைந்தான். காரிருள் சூழ்ந்தது. அந்நேரத்தில் அத்தனை பேரும் ஒருங்கே திரண்டனர்; வேறு வேறு பூண்டிருந்த வேடங்களைத் துறந்து வீரராய்க் காட்சியளித்தனர். புற்கட்டு, விறகுக் கட்டு, காவடி,