பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 பேராசிரியர் ந.சஞ்சீவி பொன்னில் பொறிக்கப்பட வேண்டிய அப்பெருவீரன் திருப்பெயர், சுற்றி நில்லாதே போ, பகையே! என்று துள்ளி வரும் வேல் தாங்கி நிற்கும் குமரவேல் பூணும் பொற்கவசத்திலேயே அழகுறப் பொறித்திருத்தல் மிக்க பொருத்தம் உடையதன்றோ? அதோடு, தொழும்பர் உளக்கோயிற்கேற்றும் விளக்கம், என்று குமரகுருபரர் உள்ளங்கனிந்து போற்றிப் பரவிய மதுரை மீனாட்சி அம்மை திருமுன்பில் அணையா விளக்குகளாய் ஒளிரும் அழகு மிக்க இரு திருவாட்சி விளக்குகள் இவர்கள் காணிக்கையே ஆகும். அச்சுடர் விளக்குகட்கு நெய்க்காக அவியூர் என்னும் கிராமமும் அளிக்கப்பட்டது. இப்படியே திருக்கானப்பேர் என்னும் பாடல் பெற்ற ஊராகிய காளையார் கோவிலில் மூன்று சந்நிதிகள் கொண்டதிருக்கோவிலைக் கட்டி, திருவாரூர்த் தேருக்கு அடுத்தபடி பெரிதாக மதிக்கப்படும் தேர் ஒன்றையும் செய்து தந்து, ஆனை மடு என்னும் அழகான நீராழியையும் புதுப்பித்தார்களாம். இக்கோவில் திருப்பணிக்குப் பல கல் தொலைவில் உள்ள மானா மதுரையிலிருந்து கை வழியாகவே செங்கல் வந்தன என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். அங்ங்ணமாயின், இவர்கட்கு இருந்த மக்கள் ஆதரவையும், மக்கள் இவர்கள்பால் கொண்டிருந்த மாறா அன்பையும் என்னென்று சொல்வது தெய்வங்களுக்கெல்லாம் கோவில் கட்டியும், கட்டிய கோவில்களைப் புதுப்பித்தும் வந்த மருது பாண்டியர்களுக்கு மக்கள் தங்கள் மனத்தையே கோவிலாகக் கட்டிக் கொடுத்தார்கள். ஆம்! மக்களது உள்ளமே மருது பாண்டியர்க்கான கோவில். அவர்கள் நாட்டு ஆடவரும் பெண்டிரும் மகிழ்ச்சியோடு பாடும் பாடல்களே அம்மருது பாண்டியர்களது புகழ் பரப்பும் காவியம். சான்றாக இதோ ஒரு பாடலைப் பாருங்கள்: 'சாந்து பொட்டுத் தளதளக்க நல்ல சந்தனப் பொட்டுக் கமகமக்க மருதைக் கோபுரம் தெரியக் கட்டின மருது வாரதைப் பாருங்கடி!' இப்படி எத்தனையே தெம்மாங்கு, கும்மி உள்ளிட்ட பாடல்கள் இன்றும் தென்பாண்டி நாட்டிலே கிராம மக்கள் நாவில் நடமாடுவதைக் காணலாம், கேட்கலாம். மருதப்பன், மருதீசன், மருதேசுவரன் என்றெல்லாம் தம் குடியினரால் வழிபடப்பட்டு வந்த குலதெய்வத்தின் பெயரையே தம் பெயராகக் கொண்டு வீரமும் கருணையும் நிறைந்த வாழ்வு வாழ்ந்து வந்த இம்மருது சகோதரர், தம் காலத்தில் ஏழைகளுக்குக் கண் கண்ட தெய்வங்களாய் விளங்கினர் என்பதற்கு எத்தனையோ சான்றுகள் உள்ளன. அவற்றுள் சுவை பொதிந்த ஒன்றனை மட்டும் இங்குக் காண்போம்: