பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 பேராசிரியர் ந.சஞ்சீவி சிவகங்கைச் சீமையின் அரசுரிமையை மருது பாண்டியரிடமிருந்து பிடுங்க, நவாபுவும் கம்பெனி அதிகாரிகளும் சேர்ந்து, ஒழுங்காகக் கப்பம் கட்டுவதில்லை என்ற காரணம் காட்டிச் சதி செய்தார்கள் மிரட்டினார்கள்; 'வீரன் ஊமைத்துரை உயிரோடு தப்பிவிட்டான் அவன் உள்ள வரை நமக்கு அமைதி ஏது? காற்றோடு தீயும் கலந்தாற்போல மருது பாண்டியரோடு சேர்ந்து கொண்டு, அவன் மாபெரும் போரைத் தொடங்குவதற்கு முன்பே நாம் சிவகங்கையைத் தாக்க வேண்டும்', என்று சிந்தித்துத் திட்டமிட்டார்கள். இதை அறிந்த மருது பாண்டியரும் ஊமைத்துரை மீது பேரன்பு படைத்த வீர மறவர்களும் திரண்டு எழுந்தார்கள், பரதேசிக் கூட்டத்திற்கு இவ்வளவு மமதையா எங்கள் அருமை அரசன் முத்து வடுகனைக் கொன்ற வெள்ளைக் கூட்டத்தை இன்னும் உயிரோடு உலாவ விடுவதா என்று ஆத்திரம் கொண்டார்கள். வீர வெறியால், அருமைச் சிவகங்கைச் சீமையின் உரிமையை இனி எக்காரணத்தாலும் பறி கொடுக்க இயலாது என்று எழுச்சி கொண்டனர் மருது பாண்டியர். இந்நிலையில் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போலக் கம்பெனி அதிகாரிகள், கப்பம் கப்பம் என்று மருது பாண்டியரை வற்புறுத்தலானார்கள். ஆனால், சிவகங்கைச் சீமையின் விடுதலை வீரர்களோ, தலை போனாலும் சல்லிக்காசும் கப்பமாகத் தாரோம்! என்று கண்டிப்பாக கூறிவிட்டார்கள். மூண்டது போர். ஆம்: பேரரசு வெறிக்கும் விடுதலை வேட்கைக்கும் இடையே மூண்டது போர்: சிவகங்கைச் சீமைக்கான விடுதலைப்போர் மூளும் நேரம் பார்த்து ஊமைத்துரையும் அவன் தோழர்களும் மருது பாண்டியர் நாட்டிற்கே வந்து சேர்ந்தார்கள். அவர்கள் உள்ளம் கொல்லன் உலை போலக் கொதித்துக் கொண்டிருந்தது. பாஞ்சைப்பதிக் கோட்டையைத் தகர்த்ததோடு, அந்நிலப் பரப்பு முழுவதையும் உப்பையும் வரகையும் வாரி இறைத்து உழவும், ஆமணக்குச் செடிகளை நடவும் இந்தப் பறங்கிக் கூட்டத்திற்கு எவ்வளவு திமிர் என்று எண்ணி ஊமைத்துரை உள்ளம் குமுறியது. நான் நாடிழந்தாலும் நம்பிக்கையை இழக்கவில்லை. வீரபாண்டியன் தம்பிதான் நான் என்பதை உலகறியச் செய்வேன்' என்று அவ்வீரன் உறுதி பூண்டான். வெள்ளை வெறியர்களின் நெறி கெட்ட செயலைச் சுட்டுப் பொசுக்க உறுதி கொண்ட முப்பெருவீரரும் சிவகங்கைச் சீமையிலே சந்தித்தனர். சிங்கங்கள் ஒன்று கூடின. அவ்வீரச் சிங்கங்களின் கர்ச்சனையைக் கேட்டுக் கம்பெனிப் பட்டாளத்தின் குலை நடுங்கியது.