பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. மீண்டும் போர் மானங்காக்கும் விடுதலைப் போர்: வெறி கொண்டு வெள்ளையன் படை பெருகுவது கண்ட மருது பாண்டியர் ஊமைத்துரை சேனை, காட்டாற்று வெள்ளம் போல, அலை மோதும் கடல்போலப் பெருகியது மருது பாண்டியரும் ஊமைத்துரையும் உடல் நமக்குச் சுமை உயிர் சிறு துரும்பு’ என்று எண்ணி முழுப் பலத்தையும் காட்டிப் போரிட்டனர். காளையார் கோவில் காட்டிற்குள்ளிருந்து கம்பெனிப் படைகள் தப்பி வெளி வருவதை மருது பாண்டியர்கள் மனம் விரும்பவில்லை. காளையார் கோவில் காட்டையே கம்பெனிப் படையின் சுடுகாடாக்க விரும்பியது அத்தமிழ் மறவர் உள்ளம். எனவே, 1801 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 23 ஆம் நாளிலிருந்து 30 ஆம் நாள் வரை அவ்வீரர்கள் கடும்போர் நடத்தினார்கள். ஆகஸ்டு மாதம் 23 ஆம் நாள் பலத்த போராட்டத்திற்கு இடையே கம்பெனிப்படைகள் காட்டிற்குள் சிக்கிக் கிடக்கும் படைகளோடு தொடர்பு வைத்துக் கொள்ளும் பொருட்டுச் சிறு வயலிலிருந்து காளையார் கோவில் காட்டுக்குள் நுழையும் பாதையின் வாயிலில் இரண்டாவது முறையாக ஒரு காவல் கொத்தளத்தைக் கட்டும் முயற்சியில் வெற்றி கண்டன. இந்த முயற்சியின் போதும் இதைத் தொடர்ந்து ஒரு வாரம் வரையும் கம்பெனிப் படைகள் வெளியுலகோடு எவ்விதத் தொடர்பும் கொள்ளாது துண்டித்துவிட வேண்டும் என்ற ஆத்திரத்துடன் போர் புரிந்தனர் மருது பாண்டியரும் ஊமைத்துரையும் அவர் படைஞரும். இதற்குள் கர்னல் இன்ஸ் தலைமையில் கம்பெனிப் படையின் ஒரு பகுதி புதுக்கோட்டை மன்னன் தத்தம் செய்திருந்த திருமயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட பொருள்களையெல்லாம் திருப்பத்துர்க் கோட்டைக்குள் திணித்து, அங்குத் தமிழர் படை புகுவதற்கு முன்பே எச்சரிக்கையோடு பலம் பொருந்திய தற்காப்பு ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தது. இவ்வாறு ஏற்பாடுகளை எல்லாம் செய்த கர்னல் இன்ஸ், பட்டமங்கலம் என்ற கிராமத்திற்குத் தன் படையுடன் வரும் வழியில், மருது பாண்டியர் படையால் நையப் புடைக்கப்பட்டான். இது பற்றிக் கர்னல் வெல்வுே பின் வருமாறு கூறியுள்ளான்.