பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 50 'தமிழர் படை எட்டுத் திசையிலும் சுற்றி நின்று வீரப்போராட்டம் நடத்தியது. அதோடு அப்படைஞருள் ஒரு பகுதியினர் கம்பெனிப் பட்டாளத்தின் குண்டுகட்கு இரையாகிச் சுருண்டு வீழ்வதற்கு முன்னால் அவர்கள் இடத்தில் மற்றொரு வீரத் தமிழ்ப்படைநின்று அஞ்சா நெஞ்சுடன் அமர் புரிந்தது.' பீரங்கிப் பலத்தையும் துப்பாக்கிப் பலத்தையும் ஈட்டியும் வேலும் வாளுமே வென்றன. ஆயுதபலத்தை ஆள் பலமே அழிக்கும் நிலை ஏற்பட்டது. கம்பெனிப் பட்டாளம் பிணக்குவியலாகிவிடும் நிலை தோன்றியது. தாம் எண்ணியதற்கு மாறாக நிலைமை இருப்பது கண்டனர் வெள்ளைத் தளகர்த்தர். கடை விரித்துக் கன்னித் தமிழகத்தில் காசு பறிக்க வந்த அவர்களது சூழ்ச்சி மூளை சுறுசுறுப்பாய் வேலை செய்தது. சென்ற இயலிலேயே வெள்ளைக் கம்பெனி அதிகாரிகள் மருது பாண்டியர்க்கு எதிராக உடையணத்தேவன் என்ற பொம்மை ராஜாவை உருவாக்கி வைத்திருந்தார்கள் என்பதைப் பார்த்தோம். அந்த உடையணத் தேவனுக்கு இப்போது அதிகார பூர்வமான பட்டாபிஷேகம் செய்யத் துணிந்தது கம்பெனி வர்க்கம். சூதினால் வெற்றி பெறத் திட்டமிட்ட கம்பெனித் தளகர்த்தர்கள், 'தப்பினோம் தப்பினோம்! என்று தங்கள் படைகளுடனே விரைந்து ஒக்கூர்க்கு அருகில் உள்ள சோழபுரம் என்ற பெரியதொரு கிராமத்திற்கு வந்து, அங்கிருந்த வலிமை பொருந்திய கோவில் மதில்களுக்குள் பாதுகாப்புத் தேடிக் கொண்டார்கள். அங்கிருந்து கொண்டு தங்கள் சூழ்ச்சிச் செயல்களை வெற்றிகரமாகத் தொடங்கினார்கள். வெள்ளிப் பணத்தை வீசி எறிந்தார்கள் வெற்றி பெற்றால் மானியம் தருவோம்; மதிப்புத் தருவோம்,' என்றார்கள், மண்ணாலும் பொன்னாலும் மயக்கினார்கள். அருகில் இருந்த நாலு கோட்டைக் கிராமத்தைச் சேர்ந்த மறவர் சாதித் தலைவர்கள் மனமுவந்து அளிக்கும் இசைவின் மேலேதான் யாரும் சிவகங்கைச் சடங்கு வழியாக மன்னர் ஆக வேண்டும். ஆனால், நம் மருது பாண்டியரோ, அப்படிச் சாதி காரணமாகவோ, சடங்கு காரணமாகவோ, மன்னர் ஆனவர் அல்லர். நல்ல தலைவனற்ற கப்பல் நடுக்கடலில் திகைப்பது போலக் கம்பெனிப் படையின் கொடுமையில் சிக்கித் தவித்த சிவகங்கைச் சீமையைக் காக்கும்பொருட்டு, மக்கள் அன்பின் துணைகொண்டு மன்னரானவர்களே இவ்வீரத் தலைவர்கள். இந்த உண்மையை நன்கு உணர்ந்திருந்த கம்பெனி அதிகாரிகள், சாதியின் பெயரால், சடங்கின் பெயரால், தமிழினத்தின் ஒற்றுமையைப் பிளக்கப் பெருமுயற்சி செய்தார்கள். பணத்தை இறைத்தும், பொய்களை விரித்தும், பழிகளைப் பரப்பியும், அந்தோ அயலார்கள் - வெள்ளை நரிகள் செய்த அந்த முயற்சியும் வெற்றி கண்டதே கொடுமை கொடுமை!