பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை ஆகஸ்டு மாதம் பேராசிரியரால் பெரிதும் மதிக்கப்பட்ட மாதம். காந்தி அடிகள் வெள்ளையனை வெளியேறச் சொல்லியதும், அதை இந்திய மக்கள் தாரக மந்திரமாய் ஏற்றதும் (9.8.1942) அதன் பயனாக ஐந்து ஆண்டுகளுக்குப் பின் பாரதநாடு விடுதலை பெற்றதும் (15.8.1947), வீரத் தலைவர் பூலித்தேவர் வரலாற்றை முதன் முதலாக நூல் வடிவில் வெளியிட்டுப் பெருமை கொண்டதும் (15.8.1958) இந்த ஆகஸ்டு மாதத்தில் தான். இதே மாதம் பேராசிரியரின் நினைவுநாள் மாதமாயும் அமைந்தது (22.8.1988) இறைவன் நடத்தும் விந்தைகளுள் ஒன்றே. பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு பேராசிரியரின் பதினாறாம் நினைவு நாளில் அவர் மனதில் தனியிடம் பெற்றிருந்த அவரது முதல் ஆய்வு மாணவர் திரு. சண்முகசுந்தரம் அவர்களின் "காவ்யா மூலமாக அவரது வரலாற்று நூல்கள் மறுபதிப்பாய் மலர்வது பேராசிரியரின் நீண்ட கால ஆசிரியப் பணிக்குக் கிடைத்த இணையில்லாப் பரிசு. சற்றேறக் குறைய இருபது ஆண்டுகளாகப் பேராசிரியர் அவர்களின் நூல்கள் சுழற்சியில் இல்லாதது என்னுள் பெரும் ஏக்கமாகவே நிலை கொண்டிருந்தது. அதைச் செயல்படுத்தும் எண்ணமிருந்த போதும், நடை முறைச் சிக்கல்களால் அதற்கு வாய்ப் பின்றியே போனது. திரு. சண்முகசுந்தரம் அவர்கள் பேராசிரியரின் நூல்கள் அனைத்தையும் வெளியிடும் விருப்பை வெளிப்படுத்திய விதம் எனது தயக்கங்களை முழுவதுமாய் வென்றது. இதற்கே இந்த இடைவெளி அமைந்தது போலும். பேராசிரியரின் நூல்களும், கையெழுத்துப் படிகளும் இனி "காவ்யா'வின் துணையுடன் தமிழகம் முழுவதும் வலம்வரும் எனின், அதற்கு திரு.சண்முக சுந்தரம் அவர்களுக்கு எங்கள் நன்றி என்றும் உரியது. * பேராசிரியரின் முதல் நூலாக 1954ல் வெளிவந்த மானங்காத்த மருது பாண்டியரும், அதை அடுத்து 1956ல் வெளிவந்த மருதிருவரும் இவர்களுக்குள் இருந்த தொடர்பு கருதி ஒருசேர ஒரே நூலாய் வெளியிடப் படுகிறது. மானங்காத்த மருது பாண்டியரைத் தமிழ்ப் பாடத்தின் துணை நூலாய்ப் பயின்ற பலர் இன்றும் அதுபற்றி நினைவு கூர்வது, இந்நூல் மாணவர்களிடையே தோற்றுவித்திருந்ததாக்கத்தின் சாட்சியாகும். விடுதலை உணர்வையும், அந்த விடுதலைக்காகப் போராடிய தமிழர் பரம்பரையின் நினைவுகளையும் இந்நூல் வரும் தலைமுறையினரின் மனதிலும் பதிக்குமானால் அதுவே பேராசிரியரின் நோக்கம்; எங்களின் விருப்பம். எழிலரசி பாலசுப்பிரமணியன் ஆகஸ்டு 2004,