பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 பேராசிரியர் ந.சஞ்சீவி கொலையுள்ளம் கொண்ட குருதி வெறி அடங்கவில்லை. ஆயுதமற்று அவ்விடுதலை வீரர்கள் அழுத கண்ணிரில் மூழ்கிக் கிடக்கும் நிலையில், 'இப்பொழுது தப்பின் எப்பொழுது வாய்க்குமோ!' என்று எண்ணியவர்களாய், வேட்டை நாய்கள் போல அவர்கள் மேல் வீழ்ந்து கவிந்து கொண்டார்கள் கம்பெனிச் சிப்பாய்கள் தமிழ் மக்களது அடிமை விலங்கை முறித்து எறிந்து, அவர்களது மானத்தைக் காக்கப் போரிட்ட அம்மாவீரர்களுடைய திருக்கரங்களில் ஏகாதிபத்தியத்தின் இரும்பு விலங்குகள் ஏறின. வேல் பிடித்த வீரக் கரங்களில் - அறிவிலும் ஆண்மையிலும் சிறந்த மக்கட்கெல்லாம் பொன்னும் பொருளும் வாரி வாரி வழங்கிய அன்புக் கரங்களில் - விலங்கு பூட்டப்பட்ட அந்தக் கொடுங்காட்சியை இன்று நினைத்தாலும் நெஞ்சு பகீர் என்கிறது! அடி வயிற்றில் தீ மூள்கிறது மருது சகோதரர்களை, ஊமைத்துரையை, சின்ன மருதுவின் வீரமைந்தர்களான சிவஞானத்தை, பச்சிளம் பாலகனான துரைசாமியைக் கைது செய்வதோடு விட்டதா கொலைகாரக் கம்பெனி வர்க்கம்! அந்தோ! அவர்கள் செய்த ஆறாத்துயர் விளைக்கும் அநீதச் செயலை எவ்வாறு தமிழ் எழுத்தால் எழுதுவது அந்தக் கொடுமை நிறைந்த செயலை நினைக்கும் போதே கண்களில் நீர் பெருகுகிறது! கொலைக்கஞ்சாத கம்பெனிப்படை காரைக்குடியிலிருந்து மதுரை செல்லும் வழியிலுள்ள திருப்பத்துர்க் கோட்டைக்கு விடுதலை வீரர்களை - மருது சகோதரர்களைப் - பலத்த காவலுடன் தூக்கிச் சென்றது. அங்கே மானங்காக்கப் போரிட்ட அவ்வீரர்களைச் சாதாரணமான ஒரு துக்கு மரத்தில் ஏற்றிக் கொன்றது கம்பெனிப் பட்டாளம்! ஆம். அப்பொழுதெல்லாம் விடுதலை வீரர்களைத் தொடர்ந்தாற்போலத் தூக்கிலிடுவதற்குப் பிரிட்டிஷ் பேரரசு பலம் பொருந்திய தூக்குமேடைகளைக் கட்டி வைக்கும் நாகரிகத்தை அடையவில்லை. தமிழகத்தின் விடுதலைப் போரை வேறு எக்காலத்தினும் விழுப்பம் உடையதாகத் தொடர்ந்து நடத்திய மருது சகோதரர்கள், துக்கிலிடப்பட்டார்கள் - அல்ல - கொலை செய்யப்பட்டார்கள். அவர்கள் பொன்னுடலங்கள் உயிரற்ற பிணமாய்த் தூக்கு மரத்தில் தொங்கின! அந்தோ அந்தக் கோரக்காட்சியை என்னென்று கூறுவது பெற்ற தாய் தந்தையார் இறப்பதையுங் கூடப் பொறுக்கலாம். ஆனால், பெற்ற தாயினும் தந்தையினும் பெரிய தாய் நாட்டின் விடுதலைக்காகக் காலமெல்லாம் போரிட்டு அல்லற்பட்ட அரும்பெருவீரர்களை, வெறிபிடித்த வெள்ளையர் துக்கிலிட்டுக் கொன்றதை எந்தத் தமிழ் நெஞ்சந்தான் பொறுக்க முடியும்? திருப்பத்தூர்க் கோட்டையில் மருது சகோதரர்களையும் அவர்கள் அருமை மைந்தனான சிவஞானத்தையும் தூக்கிலிட்டுக் கொன்ற