பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 பேராசிரியர் ந.சஞ்சீவி 'என்னிடம் அவன் வந்த காரணம், தன் தாயகத்தில் வாழும் உறவினர்களுக்குக் கடிதம் அனுப்ப உதவவேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், சட்டம் அதற்கு இடம் தராததால், என்னால் ஒன்றும் செய்ய முடியாது என மறுத்துவிட்டேன்.' தன் நினைவுகளின் இறுதியில் கர்னல் வெல்ஷ் கூறியதைப் படிக்கும் போது நம் உள்ளத் துயர் எல்லை கடந்து போகிறது. இதோ இது பற்றி வெல்ஷின் இறுதிச் சொற்கள்: "துரைசாமிக்கு என்னால் ஒன்றுமே செய்ய முடியாமல் போய்விட்டது. ஆனால், இறுதியாக என் உள்ளத்தில் உள்ள நம்பிக்கையை மட்டும் கூறிவிடுகிறேன். துரைசாமியைப் பற்றி மேலே நான் சொல்லியுள்ள சொற்களை வருங்காலத்தில் படிக்கும் எந்தக் கிழக்கிந்தியக் கம்பெனித் தலைவனாவது அருள் கூர்ந்து ஒரு குற்றமும் செய்யாத இந்த மனிதனுக்கு முழு விடுதலை தர முடியா விடினும், இவன் படும் அல்லலையாவது குறைக்க முற்படுவானாக' வெல்ஷ் நினைத்த இந்த நினைப்பும் மண்ணாயிற்று. கடல் அலைகட்கு அப்பால் கொண்டு போய்க் கொல்லாமல் கொல்லப்பட்டதியாகி துரைசாமி விட்ட மூச்சும் முடிவும் கால அலைகளோடு கலந்து கரைந்து ஒன்றாகிவிட்டன. அந்தோ துரைசாமி, சாகாமல் செத்துக் கொண்டிருந்த நீ. இந்தச் செந்தமிழ் நாட்டோடு உன் தாயினத்தோடு எழுத்தாலாவது, கடிதத்தாலாவது, உறவு கொள்ளத் துடியாய்த் துடித்தாயாமே! தாரை தாரையாக உன் கண்ணிர் இன்பத் தமிழ் நாட்டை எண்ணி எண்ணி வழிந்ததாமே! உன் பகைவனே இந்த உண்மையை உளம் திறந்து கூறுகிறானே துரைசாமி, தியாகத்தின் திருவிளக்கே, தூக்கில் ஏறிய உன் தந்தையர்கூட ஒரு நொடியில் உயிர் போக்கிக் கொண்டனர். ஆனால், நீயோ, ஆண்டுக் கணக்காகச் சாகத் துடித்தாயாமே! எங்கள் குலதெய்வமே, தியாக ஒளியே, உன் வீரத் திருவடிகளை அகக்கண்களாலாவது கண்டு, தொட்டு வணங்குகிறோம். அப்பா, துரைசாமி, உன்னையும் உன் தியாகத்தையும் ஒரு நாளும் மறவோம் மறவோம்: