பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கால வெளியிலே கன்னித் தமிழகத்தின் புகழ் அழியாத் தன்மை வாய்ந்தது. அப்புகழ்க்கு ஊற்றாய் விளங்கும் ஏற்றம் பழம்பெருமை வாய்ந்த பாண்டிப் பெருநாட்டிற்கு உண்டு. புலவர் நாவில் பொருந்திய கொடி-வையையென்னும் பொய்யாக் குலக்கொடி - பாய்ந்து வளங்கொழிக்கும் பொன்னாடு பாண்டி நன்னாடு, தொன்று தொட்டுக் கலை மணமும் கடவுள் மணமும் கமழும் பெருமை அத்திருநாட்டிற்கு உண்டு. முத்தும் முத்தமிழும் சேர விளையும் சிறப்பு அச்செந்தமிழ் நாட்டின் தனி உரிமை, பன்னூறு ஆண்டுகளாய்ப் பாடிவரும் கவிஞர்களின் பாட்டாலும், வரலாற்று ஆசிரியர்களின் எழுதுகோலாலும் அந்நாட்டின் மாண்பை முற்றிலும் அளந்து காட்ட முடியவில்லை. ஏட்டிலடங்கா இலக்கிய உயர்வும், ஆராய்ச்சியிலடங்காச் சரித்திரப் புகழும் ஒருங்கே படைத்த அந்நாட்டின் மாட்சியைக் காலவெள்ளத்தையும் எதிர்த்து நின்று கலங்கரை விளக்கமாய்க் காட்டி நிற்கும் கல்லெழுத்துக்களின் கீர்த்தியோ, பெரிது; மிகப் பெரிது! சங்கம் நிறுவிச் செந்தமிழ் வளர்த்த அந்நாட்டின் பெருமையைப் பனம்பாரனார் காலம் முதல் பாரதியார் காலம் வரை தோன்றிய தமிழ்ப் புலவர்களுள் பாடாத - பாடி மகிழாத - பாவலரும் உண்டோ? சோமன் வழி வந்த பாண்டியா, நின் நாடுடைத்து நல்ல தமிழ்,' என்பது ஒளவை மூதாட்டியின் அமிழ்தனைய திருமொழியன்றோ? கொற்கை முத்தும் சங்கத் தமிழும் பாண்டி நாட்டின் இசையைப் (புகழை) பாரெங்கும் பரப்பியது போன்றே, அந்நாட்டில் வாழையடி வாழையாய் வந்த மன்னரும் மாந்தரும் தம் வாழ்விலும் வரலாற்றிலும் காட்டிய மானமும் மறமும் அவர்தம் தாய்த்திருநாட்டினை வீரத்தின் விளைநிலம் என்று வையகம் போற்றுமாறு செய்துள்ளன. ஆரியப் படைகடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் முதலாக, சென்ற தலைமுறையில் தோன்றிய செந்தமிழ் வீரர் வ.உ.சி. ஈறாக ஆயிரம் ஆயிரம் அஞ்சா நெஞ்சுடை அரும்பெருமறவர்களை ஈன்ற பெருமை பாண்டி நாட்டிற்கு உண்டு. ஈன்ற பொழுதினும் அவரைச் சான்றோர் என்று மன்பதை எல்லாம் போற்றியது கண்டு மெய் சிலிர்த்து மனங்குளிர்ந்து பூரித்த பெருமையும் நம் தமிழ்த் தாய்க்கு உண்டு. பாண்டி நாட்டை முத்தமிழ் நாட்டினும் முதன்மை வாய்ந்த திருநாடு எனல் மிகையாகாது. குமரித்துறையும், குற்றால அருவியும், வைகை ஆறும், கோடை மலையும் அணி செய்யும் அந்நாட்டின் இயற்கை அழகிற்கு ஓர்